ஆன்மிகம்
நெல்லூரில் நடந்த திருவிழாவில் முத்தாலம்மன் சிங்க வாகனத்தில் பூஞ்சோலைக்கு சென்றபோது எடுத்த படம்.

பட்டிவீரன்பட்டி பகுதியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா

Published On 2020-10-17 04:44 GMT   |   Update On 2020-10-17 04:44 GMT
பட்டிவீரன்பட்டி பகுதியில் முத்தாலம்மன் கோவில்களில் புரட்டாசி மாத திருவிழா கொரோனா ஊரடங்கு காரணமாக 3 நாட்கள் எளிமையாக நடைபெற்றது.
பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி, சின்னகவுண்டன்பட்டி, சின்ன அய்யம்பாளையம், நெல்லூர் ஆகிய 5 ஊர்களில் உள்ள முத்தாலம்மன் கோவில்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வெகு விமரிசையாக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவிழா கொரோனா ஊரடங்கு காரணமாக 3 நாட்கள் எளிமையாக நடைபெற்றது. விழாவில் முதல் நாளான 14-ந்தேதி எல்லைக் காவல்காரன்சாமி பூஜை நடந்தது. பின்பு முத்தாலம்மனை அலங்கரித்து சிங்க வாகனத்தில் கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அம்மனுக்கு கண்திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 2-ம் நாள் விழாவில், அம்மனுக்கு மாவிளக்கு, பொங்கல், அக்னிசட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 3-ம் நாளான நேற்று முத்தாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிங்க வாகனத்தில் முளைப்பாரி ஊர்வலத்துடன் பூஞ்சோலைக்கு சென்றடைந்தார். விழாவையொட்டி வழக்கமாக நடைபெறும் வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், பெண்கள் பாட்டு பாடி கும்மி அடித்தல் மற்றும் கரகாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை அந்தந்த ஊர்களில் உள்ள விழா குழுவினரும், கோவில் நிர்வாகிகளும் மற்றும் ஊர் மக்களும் இணைந்து செய்திருந்தனர். திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.
Tags:    

Similar News