உள்ளூர் செய்திகள்
எம்ஜிஆர்

எம்.ஜி.ஆர். என்றால் மனிதநேயம்

Published On 2022-01-17 02:45 GMT   |   Update On 2022-01-17 02:45 GMT
தன்னை அறியாதவருக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் தேடிப்போய் உதவி செய்பவர் எம்.ஜி.ஆர்.
மனிதநேயம் என்றால் எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆர். என்றால் மனிதநேயம்.

மனிதநேயம் என்பது சாதி, மதங்களை கடந்து முகம் தெரியாத மனிதர்களுக்கு பிரதிபலன் பாராது செய்யும் உதவி. அப்படி வாழ்ந்த புரட்சித்தலைவர் அவதரித்த நாள்தான், மனிதநேய நாள் இன்று (17-ந்தேதி).

மனிதநேயத்தின் மனித அவதாரமாக கலியுக வள்ளல் வாழ்ந்தார் என்பதற்கு உதாரணமாக ஒருசில சம்பவங்களை மட்டும் பதிவிடுகிறேன். 1961-ம் ஆண்டு கோடம்பாக்கம் ரெயில்வே பாலம் மூடிக்கிடந்த நேரத்தில், கன மழையில் உடல் தொப்பலாக நனைந்திருக்க, கை ரிக்‌ஷாவை இழுக்கமுடியாமல் ஒரு முதியவர் கிடுகிடுவென நடுங்கிய காட்சியை காரிலிருந்து கவனித்த புரட்சித்தலைவருக்கு நெஞ்சம் துடிக்கிறது, கண்கள் கலங்குகிறது.

உடனடியாக, தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து கை ரிக்‌ஷா தொழிலாளர்களுக்கும் மழைக்கோட்டு வழங்க ஏற்பாடு செய்தார். தார்ப்பாய் மழைக்கோட்டு சுமையாக இருக்கும் என்பதால், அப்போது அறிமுகமாகியிருந்த விலை அதிகமான பிளாஸ்டிக் சீட்டில் தைத்து 25 ஆயிரம் பேருக்கு கொடுத்தார்.

தமிழக முதல்-அமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பிய நேரத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அனந்தநாயகி, ‘முதல்-அமைச்சருடைய வெளிநாட்டு சிகிச்சைக்கு எவ்வளவு பணம் செலவானது? அது சொந்த பணமா, அரசு பணமா? அல்லது கட்சி பணமா?’ என்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அண்ணா, ‘‘எனது சிகிச்சைக்கு முழு செலவான ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் என் அன்பு தம்பி எம்.ஜி.ஆர்.தான் கட்டினார். கட்சியும் செலவழிக்கவில்லை, அரசு பணமும் அல்ல’ என்று விளக்கம் கொடுத்தார். அதுவரை, அண்ணாவுக்கான செலவை நான் செய்தேன் என்று யாரிடமும் எம்.ஜி.ஆர். சொன்னதே இல்லை. அதுதான் எம்.ஜி.ஆரின் மனிதநேயம்.

தன்னை அறியாதவருக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் தேடிப்போய் உதவி செய்பவர் எம்.ஜி.ஆர். என்பதற்கு உதாரணம்தான், ராமாயி அம்மாள். கொடிகாத்த குமரன் என்று போற்றப்படும் திருப்பூர் குமரனின் மனைவியான ராமாயி அம்மாளை காங்கிரஸ் கட்சி மறந்தே போனது. அவர் வறுமையில் வாடுவதாக முதல்-அமைச்சராக இருந்த புரட்சித்தலைவரிடம் தகவல் சொல்லப்பட்டதும், உடனே நேரில் சந்தித்து ரூ.25 ஆயிரம் நிதியுதவியளித்து, மாதந்தோறும் உதவித்தொகைக்கும் ஏற்பாடு செய்தார்.

அதனால்தான் புரட்சித்தலைவர் இறந்ததும் ராமாயி அம்மாள், ‘என் பிள்ளை காலமான துயரத்தை இன்று நான் அனுபவிக்கிறேன். பெற்ற தாயின் வயிறு வாடாமல் காலம் முழுவதும் உணவும், உடையும் கிடைக்குமாறு செய்வதுதான் ஒரு பிள்ளையின் கடமை. எனக்கு பிள்ளை எம்.ஜி.ஆர்.தான்’ என்று கதறி அழுதார்.

உதவி செய்வதற்கு புரட்சித்தலைவர் எந்த கணக்கும் பார்ப்பதே இல்லை. தமிழகம் முழுவதுமுள்ள கை ரிக்‌ஷா தொழிலாளர்களுக்கு மழைக்கோட்டு வழங்குவதற்காக கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் செலவழித்தார். அன்றைய காலகட்டத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை சராசரியாக ரூ.56 தான். அதேபோல் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட தங்க வாளை பாகிஸ்தான் படையெடுப்பின்போது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

இதுமட்டுமல்ல, தனுஷ்கோடி புயல் நிவாரணத்துக்கு ரூ.1 லட்சம், சீன படையெடுப்பின்போது ரூ.88 ஆயிரம், பாகிஸ்தான் படையெடுப்பின்போது ரூ.85 ஆயிரம், அவ்வை இல்லத்துக்கு ரூ.30 ஆயிரம், கலைவாணர் என்.எஸ்.கே. வீடு ஏலத்திலிருந்து மீட்டுக்கொடுத்தது ரூ.20 ஆயிரம், சென்னை ஆந்திர மகிளா சபா ஈஸ்வரபிரசாத் அங்கஹீன குழந்தைகள் பராமரிப்புக்கு ரூ.10 ஆயிரம் என்று அள்ளியள்ளி கொடுத்துள்ளார்.

அன்றைய காலகட்டத்தில் புரட்சித்தலைவர் கொடுத்த பணத்துக்கு தங்கமோ, இடமோ வாங்கியிருந்தால் அது இன்றைய மதிப்பில் ஆயிரம் கோடிகளை தாண்டியிருக்கும். ஆனால், புரட்சித்தலைவர் ஏழை-எளிய மக்கள் மனதில்தான் தன்னுடைய பணத்தை முதலீடு செய்தார். இப்படி வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாக திகழ்ந்த புரட்சித்தலைவரை 14 வயதிலேயே தலைவராக ஏற்றுக்கொண்டவன் நான்.

‘தர்மம் தலைகாக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும்…’ ‘உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்’ ஆகிய பாடல்கள்தான் என்னை புரட்சித்தலைவரிடம் கொண்டுபோய் சேர்த்தன.

‘சேவையை பிரதானப்படுத்திய பொதுவாழ்க்கையை அமைத்துக்கொள்’ என்று புரட்சித்தலைவர் எனக்கு வழங்கிய ஆலோசனையை அரச கட்டளையாக ஏற்றுக்கொண்டதன் வெளிப்பாடுதான், மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வி அறக்கட்டளை. மனிதநேய அறக்கட்டளையின் இலவச பயிற்சி மூலம் ஐ.ஏ.எஸ்., நீதித்துறை, டி.என்.பி.எஸ்.சி. போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளில் மட்டும் 3 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வாகி உயர் பதவியில் இருக்கிறார்கள்.

இதுதவிர, மத்திய-மாநில அரசு பல்வேறு பதவிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியில் இருக்கிறார்கள். மேலும், பயிற்சி பெற்றவர்கள் 1.5 லட்சம் பேர் தேர்வு எழுதிவருகிறார்கள். இதுவரை சுமார் 145 சாதியை சேர்ந்தவர்கள் அரசு பணி புரிவதற்கு மனிதநேயம் உதவிசெய்துள்ளது. என்னை போலவே லட்சக்கணக்கான எம்.ஜி.ஆர். தொண்டர்கள் அவரவர் தகுதிக்கேற்ப செலவழித்து, புரட்சித்தலைவரின் மனிதநேய சிந்தனையை தலைமுறை தாண்டி உலகம் முழுவதும் விதைத்துவருகிறார்கள். ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும். இவர்போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்' என்ற பாடல் வரிகளுக்கு உதாரணமாக வாழ்ந்துகாட்டி, வழிகாட்டிய புரட்சித்தலைவர் பிறந்தநாளை, மனிதநேய நாளாக உலகம் உள்ளவரை மக்கள் கொண்டாடி மகிழ்வார்கள்.


சைதை துரைசாமி,
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர்

Tags:    

Similar News