செய்திகள்
குளத்திற்குள் பாய்ந்த காரை மீட்கும் போலீசார்

குளத்தில் கார் கவிழ்ந்து வக்கீல் பலி- 2 நாட்களுக்கு பிறகு உடல் இன்று மீட்பு

Published On 2021-09-07 08:20 GMT   |   Update On 2021-09-07 08:20 GMT
வக்கீல் மார்ட்டின் லூதர் கிங் வள்ளியூர் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். கடந்த 5-ந்தேதி மாலையில் அவர் வீட்டில் இருந்து கன்னியாகுமரிக்கு காரில் வந்துள்ளார்.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் இருந்து நெல்லை செல்லும் 4 வழிச்சாலையில் மகாதான புரம் பகுதியில் நாடான் குளம் உள்ளது.

இன்று காலை அந்த பகுதிக்கு சென்ற பொதுமக்கள் குளத்தில் ஒரு கார் மிதப்பதை கண்டனர். அவர்கள் இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் குளத்திற்குள் கிடந்த காரை மீட்டனர். காருக்குள் வாலிபர் ஒருவ பிணமாக கிடப்பதை கண்டனர்.

வாலிபர் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும் காரில் இருந்த ஆவணங்கள் மூலம் அந்த வாலிபர் வள்ளியூரை அடுத்த மேலசண்முகநாதபுரம் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவைச் சேர்ந்த மார்ட்டின் லூதர் கிங் (வயது 31) என தெரிந்து கொண்டனர்.

மார்ட்டின் லூதர் கிங் வள்ளியூர் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். கடந்த 5-ந்தேதி மாலையில் அவர் வீட்டில் இருந்து கன்னியாகுமரிக்கு காரில் வந்துள்ளார்.

கன்னியாகுமரியில் இருந்து 5-ந்தேதி இரவு மீண்டும் ஊர் திரும்பி உள்ளார். அப்போதுதான் கார் நாடான் குளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கி உள்ளார். நாடான் குளத்தில் ஆகாயதாமரை மற்றும் செடி, கொடிகள் படர்ந்து கிடக்கிறது. இதனால் குளத்தில் கவிழ்ந்த கார் வெளியே தெரியவில்லை.

இதற்கிடையே மார்ட்டின் லூதர் கிங் வீட்டிற்கு திரும்பாததால் அவரது உறவினர்கள் மார்ட்டின் லூதர் கிங் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் செல்போன் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக காட்டியது.

இதனால் அவர்கள் மார்ட்டின் லூதர் கிங்கை பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். இந்த நிலையில் தான் அவர் காருடன் குளத்தில் மூழ்கி பலியானது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News