ஆன்மிகம்
நள்ளிரவில் தேவாலயம், இந்து கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை

இன்று புத்தாண்டு பிறக்கிறது: நள்ளிரவில் தேவாலயம், இந்து கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை

Published On 2019-12-31 04:35 GMT   |   Update On 2019-12-31 04:35 GMT
இன்று புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளது. இதைப்போல் இந்து கோவில்களில் விசேஷ வழிபாடும் நடைபெற உள்ளது.
இன்று 2019-ம் ஆண்டு முடிந்து 2020-ம் ஆண்டு பிறக்கிறது, இதையொட்டி சென்னையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. சாந்தோம் தேவாலயத்தில் இரவு 11.30 மணிக்கு நன்றி ஆராதனையும், 12 மணிக்கு புத்தாண்டு திருப்பலியும் நடைபெற உள்ளது. இந்த திருப்பலிக்கு சென்னை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையேற்று, புத்தாண்டு அருளுரை வழங்குகிறார். தொடர்ந்து பகல் முழுவதும் பல நேரங்களில் சாந்தோம் தேவாலயத்தில் பிரார்த்தனை நடைபெறுகிறது.

இதைப்போல் பழைய வண்ணாரப்பேட்டை புனித ராக்ஸ் மாதா தேவாலயத்தில் இரவு 11 மணிக்கு நன்றி ஆராதனையும், 12 மணிக்கு புத்தாண்டு திருப்பலியையும் லூயிஸ் அடிகளார் நிகழ்த்துகிறார். பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் இரவு 11.30 மணிக்கு நன்றி ஆராதனையும், 12 மணிக்கு புத்தாண்டு திருப்பலியையும் பங்குதந்தை வின்சென்ட் சின்னதுரை அடிகளார் நிகழ்த்துகிறார்.

கொளத்தூர் திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தில் இரவு 11 மணிக்கு நன்றி ஆராதனையும், 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு திருப்பலியை பங்குதந்தை பி.ஐ.அந்தோணிராஜ் அடிகளார் நிகழ்த்துகிறார். சின்னமலை ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில், இரவு 11 மணிக்கு புத்தாண்டு நன்றி ஆராதனையும், தொடர்ந்து திருப்பலியும், காலை 6.15, 8, 11.30 மணிக்கு திருப்பலியையும் பங்குதந்தை லாரன்ஸ் ராஜ் அடிகளார் நிகழ்த்துகிறார்.

அடையாறு இயேசு அன்பர் ஆலயத்தில் பாதிரியார் எம்.சந்திரசேகர் தலைமையில் புத்தாண்டு சிறப்பு ஆராதனை நடைபெற உள்ளது.

அண்ணாசாலை புனித ஜார்ஜ் கதீட்ரலில் ஆலயத்தில் இரவு 11.30 மணிக்கும், காலை 7.30 மணிக்கும், பாதிரியார் லாரன்ஸ் ஜெபதாஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளது. நெற்குன்றம் சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயத்தில் இரவு 11.30 மணிக்கும், காலை 9 மணிக்கும் ஆயர் ஐ.இம்மானுவேல் பிரபாகரன் தலைமையில் புத்தாண்டு திருவிருந்து ஆராதனை நடைபெற உள்ளது. கிழக்கு தாம்பரம் தூய மத்தேயு சி.எஸ்.ஐ. ஆலயத்தில் இரவு 11.30 மணிக்கும், காலை 7, 9 மணிக்கும், பாதிரியார் சாமுவேல் தலைமையில் புத்தாண்டு திருவிருந்து ஆராதனை நடைபெற உள்ளது.

இதைப்போல் சென்னையில் உள்ள அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும், தென்னிந்திய திருச்சபை ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும்.

வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்க நாணய கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு பகல் 12 மணி வரை முருகன் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து பகல் 1 மணியில் இருந்து மாலை 4 மணி வரை தங்க கவச அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரை சந்தன காப்பு மற்றும் புஷ்ப அலங்காரம் செய்யப்படுகிறது. பக்தர்கள் தரிசனத்துக்காக சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், செயல் அலுவலர் கே.சித்ரா தேவி ஆகியோர் செய்து வருகின்றனர்.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கபாலீசுவரருக்கும், கற்பகம்பாளுக்கும் அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடக்கிறது. மகாலிங்கபுரம் ஐயப்பன் குருவாயூரப்பன் கோவில் காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 4.45 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு காலை பூஜை, தொடர்ந்து பகல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து மாலை 5 மணியில் இருந்து இரவு 9 மணி வரை தரிசனத்துக்காக கோவில் நடை திறந்து இருக்கும்.
Tags:    

Similar News