செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரம்

மதுரையில் 10 தொகுதிகளில் தயார் நிலையில் 3,856 வாக்குச்சாவடி மையங்கள்

Published On 2021-04-05 10:50 GMT   |   Update On 2021-04-05 10:50 GMT
கொரோனா காலகட்டமாக இருப்பதால் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை, கையுறைகள், தெர்மல் ஸ்கேனர் ஆகியவையும் வழங்கப்படுகிறது.
மதுரை:

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்காக 3 ஆயிரத்து 856 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 18 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்ற இருக்கிறார்கள். இவர்களுக்கு 2 கட்டங்களாக பயிற்சிகள் வழங்கப்பட்ட நிலையில் இன்று 3-ம் கட்டமாக பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது.

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடிகளின் பணியாற்றும் அலுவலர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுபோல், வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிக்கும் வகையில், வாக்குச்சாவடி மையங்களில் தடுப்பு கம்புகள் அமைக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.

வாக்குச்சவாடி மையங்களில் தடையில்லா மின்சாரம், கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடக்கிறது. மேலும் வாக்குச்சாவடி மையங்கள் எந்தப்பகுதியில், எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதை குறிக்கும் வகையில் வரைபடம் வரையும் பணியும் நடக்கிறது. இது போல் மதுரை மாவட்டத்தில் பதற்றம் உள்ள வாக்குச்சாவடிகளாக கண்டறியப் பட்டுள்ள மையங்களில் வெப் கேமராக்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்கு எந்திரங்கள் இன்று அனுப்பப்படுகிறது. இதற்காக அனைத்து எந்திரங்களும் சரியான முறையில் செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்யும் பணிகளும் நடந்து வருகிறது.

இதுதவிர கொரோனா காலகட்டமாக இருப்பதால் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை, கையுறைகள், தெர்மல் ஸ்கேனர் ஆகியவையும் வழங்கப்படுகிறது. எந்தெந்த வாக்குச்சாவடிக்கு எத்தனை உபகரணங்கள் என்பதை கணக்கெடுக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவுபெற்ற பின்னர் இன்று காலை மின்னணு வாக்கு எந்திரங்களுடன், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களும் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News