செய்திகள்
புகழேந்தி

இந்த தேர்தலுடன் தினகரன் கட்சி காணாமல் போய்விடும்- தேனியில் புகழேந்தி பேச்சு

Published On 2021-04-01 08:10 GMT   |   Update On 2021-04-01 08:10 GMT
அ.தி.மு.கவில் பல்வேறு பதவிகளையும், பொறுப்புகளையும் அனுபவித்துவிட்டு தங்கதமிழ்ச்செல்வன் துரோகியாக மாறி தி.மு.கவில் இணைந்துள்ளார் என்று செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறினார்.
தேனி:

தேனியில் அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் புகழேந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

அ.ம.மு.க என்ற கட்சியை டி.டி.வி.தினகரன் தேவையில்லாமல் ஆரம்பித்துள்ளார். ஒரு கட்சியை நடத்திக்கொண்டு இன்னொரு கட்சியை எப்படி மீட்க முடியும். மக்களையும் தன்னை சார்ந்தவர்களையும் தொடர்ந்து குழப்பிக் கொண்டு வருகிறார்.

அவரை நம்பிச்சென்றால் நடுத்தெருவில்தான் நிற்க முடியும். இந்த தேர்தலுடன் அ.ம.மு.க காணாமல் போய்விடும். சசிகலா வந்தால் பெரிய மாற்றம் வந்துவிடும் என்றனர். ஆனால் அவரோ ஆன்மீக பணிகளுக்கு சென்று விட்டார். கூட்டணியில் இருந்தாலும் அ.தி.மு.க, பா.ஜ.க கொள்கைகள் வேறு வேறாகத்தான் உள்ளது.

ஸ்டாலின் போடியில் பேசும்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை துரோகி என்றும், அவர் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர் என்றும் பேசியுள்ளார். ஜெயலலிதா ஓ.பன்னீர்செல்வத்திடம் தான் கட்சி தொடர்பாக அதிகமுறை ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

கொடுத்த முதல்வர் பதவியை அப்படியே மீண்டும் ஒப்படைத்தார் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் மீது ஜெயலலிதாவிற்கு நல்ல மதிப்பு உண்டு. ஆனால் அ.தி.மு.கவில் பல்வேறு பதவிகளையும், பொறுப்புகளையும் அனுபவித்துவிட்டு தங்கதமிழ்ச்செல்வன் துரோகியாக மாறி தி.மு.கவில் இணைந்துள்ளார். தான் இன்னும் அ.தி.மு.கவில் இருப்பதாக நினைத்துக்கொண்டே அவர் தனது பேட்டியில் தி.மு.க இனி ஆட்சிக்கு வரவே முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அதை பார்த்த ஸ்டாலினுக்கு அவர் மீது கோபம். எனவே தான் போடியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக அவரை களத்தில் நிறுத்தியுள்ளார். ஏற்கனவே மக்களவை தேர்தலில் அவரது மகன் ரவீந்திரநாத்திடம் தங்கதமிழ்ச்செல்வன் தோற்றார். இந்த முறை ஓ.பன்னீர்செல்வத்திடமும் தோற்க உள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News