செய்திகள்
கோப்புப்படம்

உசிலம்பட்டி அருகே பிறந்த ஒருவாரத்தில் பெண் சிசுக்கொலை?- போலீஸ் விசாரணை தீவிரம்

Published On 2021-02-19 09:39 GMT   |   Update On 2021-02-19 09:39 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிறந்து ஒருவாரமே ஆன பெண் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கே.பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி சின்னச்சாமி. இவரது மனைவி சிவபிரியங்கா இவர்களுக்கு ஏற்கனவே 8 மற்றும் 3 வயதுள்ள 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சிவ பிரியங்கா மீண்டும் கர்ப்பமானார். கடந்த வாரம் பழனிபாப்பம்பட்டி அரசு மருத்துவமனையில் அவருக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர் கணவர் வீட்டுக்கு குழந்தையுடன் வந்து விட்டார்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு 8 மணிக்கு குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், பேச்சு, மூச்சின்றி கிடப்பதாகவும் கூறி சின்னச்சாமி, சிவபிரியங்கா ஆகியோர் குழந்தையை உசிலம்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

டாக்டர்கள் குழந்தையை பரிசோதனை செய்த போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மேலும் குழந்தையின் முகத்தில் நகக்கீறல் காயங்கள் இருந்ததால் மரணத்தில் சந்தேகம் எழுந்தது.

இதுகுறித்து உசிலம்பட்டி மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர்கள் உடனே மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் உத்தப்ப நாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் இறந்த குழந்தை உடல் உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

மேலும் இதுகுறித்து உத்தப்பநாயக்கனூர் காவல்துறையினர் பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர்.

குழந்தையின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகு முழுமையான காரணம் தெரியவரும்.

சின்னசாமி-சிவபிரியங்காவுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தை உள்ளது. 3-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் சிசுக்கொலை செய்யப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1990-ம் ஆண்டுகளில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பெண் சிசுக்கொலை அதிகரித்து இருந்தது. குறிப்பாக மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த சம்பவம் அதிகமாக இருந்தன.

இதனை தடுக்கவும், பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் ஒரு பகுதியாக தொட்டில் குழந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இன்றைய நவீன கால கட்டத்திலும் சில இடங்களில் பெண் சிசுக்கொலை அரங்கேறி வருவது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வருடங்களாக மதுரை மாவட்டத்தில் பிறக்கும் பெண் குழந்தைகள் ஒரு சில வாரத்தில் மர்மமான முறையில் இறந்து வருகிறது. இது மீண்டும் பெண் சிசுக்கொலை தலைதூக்கியுள்ளதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News