செய்திகள்

எண்ணூர் துறைமுகம் அருகே கடலில் கலந்த டீசலை அப்புறப்படுத்தும் பணி தொடக்கம்

Published On 2017-01-30 06:55 GMT   |   Update On 2017-02-03 02:55 GMT
எண்ணூர் துறைமுகம் அருகே 2 கப்பல்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் டீசல் ஏற்றி வந்த கப்பல் சேதமடைந்து, டீசல் கடலில் கொட்டியது. கடற்கரையில் தண்ணீரில் கலந்த டீசலை அப்புறப்படுத்தும் பணியை கப்பல் படை அதிகாரிகள் தொடங்கினர்.
திருவொற்றியூர்:

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கடந்த 27-ந் தேதி இரவு எரிவாயு இறக்கி விட்டு ஈரான் நாட்டு கப்பல் துறைமுகத்தில் இருந்து வெளியே புறப்பட்டது.

அப்போது மும்பையில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு எண்ணூர் துறைமுகம் நோக்கி சரக்கு கப்பல் வந்தது.

துறைமுகத்தில் இருந்து 1.8 கடல் மைல் தூரத்தில் வந்தபோது இந்த 2 கப்பல்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் டீசல் ஏற்றி வந்த கப்பல் பலத்த சேதம் அடைந்தது. அதிலிருந்து டீசல் பீறிட்டு கடலில் கொட்டியது.

தகவல் அறிந்ததும் எண்ணூர் துறைமுக அதிகாரிகள் கடலோர பாதுகாப்பு படையினருடன் சென்று டீசல் கொட்டுவதை தடுத்து நிறுத்தினர். மேலும் அந்த கப்பலை அங்கேயே நங்கூரமிட்டு நிறுத்தி வைத்தனர்.

தண்ணீரில் கலந்த டீசல் கடல் பரப்பு முழுவதும் பரவியது. அலையின் வேகத்தில் எண்ணூர், திருவொற்றியூர், எர்ணாவூர், பழவேற்காடு கடற்கரை முழுவதும் டீசல் கலந்த தண்ணீர் கரை ஒதுங்கியது.

தாழ்வான பகுதியான திருவொற்றியூர் பாரதியார் நகர் கடற்கரையில் அதிக அளவு டீசல் கரை ஒதுங்கியது. அவை சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு கடற்கரையோர பாறைகளில் டீசல் படிந்து காணப்படுகிறது.

கடல் நீரில் கலந்த டீசலால் கரைக்கு வந்த ஏராளமான ஆமைகள் செத்தன. மீனவர்களும் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து கடல் நீரில் கலந்த டீசலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை திருவொற்றியூர் ராமகிருஷ்ணா நகர் கடற்கரையில் தண்ணீரில் கலந்த டீசலை அப்புறப்படுத்தும் பணியை கடலோர காவல் படை, கப்பல் படை அதிகாரிகள் தொடங்கினர். அப்போது அவர்கள் கொண்டு வந்திருந்த மிதவை கயிறு அறுந்தது. இதைத் தொடர்ந்து எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டது.

இன்று காலை அவர்கள் மீண்டும் எண்ணெய் படலத்தை அகற்றும் பணியை தொடங்கினர். இதற்காக 30 பேர் கொண்ட குழுவினர் வந்திருந்தனர்.

அவர்கள் திருவொற்றியூர் பாரதியார் நகர், ராமகிருஷ்ணா நகர் கடல் பகுதியில் பரவி இருந்த டீசலை அப்பறப்படுத்தினர். மிதவை கயிறு மற்றும் நவீன எந்திரம் மூலம் டீசலை உறிஞ்சி எடுத்தனர். வாளிகளில் எண்ணெய் படலத்தை சேகரித்து பேரலில் கொட்டி வைத்தனர்.

இந்த பணி 2 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது. இது குறித்து எண்ணூர் துறைமுக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கடல் நீரில் கலந்த டீசலால் பாதிப்பு இல்லை. எனினும் அதனை அப்புறப்படுத்தும் பணியில் கடலோர காவல் படை சுற்றுச்சூழல் பொறுப்பு குழுவினர், கப்பல் படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சு மிதவை கயிறை டீசல் பரவியுள்ள இடத்தை சுற்றி முதலில் வீசுவார்கள். பின்னர் நவீன எந்திரம் மூலம் டீசல் ஊறிஞ்சி எடுக்கப்படும்.

இந்த பணியை 2 நாட்களில் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் அச்சப்பட வேண்டாம். கரையோரத்தில் ஒதுங்கிய டீசல் தானாக வெளியேறிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News