செய்திகள்
முதுமலை புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்குட்டிகளை காணலாம்

முதுமலை புலிகள் காப்பகத்தில் மீட்கப்பட்ட 2 புலிக்குட்டிகளை வண்டலூர் கொண்டு செல்ல முடிவு

Published On 2020-11-23 02:28 GMT   |   Update On 2020-11-23 08:55 GMT
முதுமலை புலிகள் காப்பகத்தில் மீட்கப்பட்ட 2 குட்டிகளை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளதாக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
கூடலூர்:

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் (வெளிமண்டலம்) சிங்காரா வனச்சரகம் ஆச்சக்கரை பகுதியில் கடந்த 19-ம் தேதி பெண் புலி இறந்து கிடந்தது. மேலும் அதன் உடல் அருகே பிறந்து 3 வாரங்கள் மட்டுமே ஆன 2 ஆண் புலிக்குட்டிகள் தனது தாயை இழந்த சோகத்தில் அந்தப்பகுதியில் தவித்து கொண்டிருந்தது.

இதை பார்த்த வனத்துறையினர் அந்த 2 புலிக்குட்டிகளை மீட்டு முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பராமரித்தனர்.

பின்னர் அந்த புலிக்குட்டிகளை பராமரிப்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து வண்டலூர் உயிரியல் பூங்கா கால்நடை டாக்டர் ஸ்ரீதர் வரவழைக்கப்பட்டார். அவர் அங்கு வந்து மீட்கப்பட்ட புலிக்குட்டிகளை பரிசோதித்தார்.

அப்போது 2 குட்டிகளும் நல்ல நிலையில் ஆரோக்கியமுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த குட்டிகளுக்கு தேவையான பால் உள்ளிட்ட உணவுகளை கால்நடை மருத்துவ குழுவினர் வழங்கினர். இது குறித்து முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-

வனப்பகுதியில் மீட்கப்பட்ட 2 புலிக்குட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தொடர் பராமரிப்பு, அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் அந்த புலிக்குட்டிகளை பராமரித்து வளர்க்க அனைத்து வசதிகளும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருப்பதால், அங்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது. அங்கு 4 மாதங்கள் தொடர் பராமரிப்புக்கு பிறகு புலிக்குட்டிகளை மீண்டும் முதுமலைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. இருந்த போதிலும் அப்போதைய நிலையின்படி முடிவு எடுக்கப்படும். 2 புலிக்குட்டிகளையும் வண்டலூர் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News