செய்திகள்
மழை

சென்னையில் 5 நாட்களாக பெய்து வரும் கனமழை- கிணறுகளில் நீர்மட்டம் உயருகிறது

Published On 2021-07-20 08:14 GMT   |   Update On 2021-07-20 08:14 GMT
இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வருவதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. நீலகிரி, கோவை மற்றும் மலை மாவட்டங்களில் கனமழை பெய்கிறது.

சென்னையிலும் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் கனமழையும், நகரின் சில பகுதிகளில் லேசான மழையும் பெய்கிறது.

மாலை நேரங்களில் மேக மூட்டங்கள் நிறைந்து இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதே வேளையில் பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்துகிறது. இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வருவதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு இல்லாத வகையில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. ஆரம்பத்தில் தூரலாக பெய்யத் தொடங்கும் மழை பின்னர் கனமழையாக நீடித்து கொட்டுகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.



தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. சாலைகளிலும் ஒரு சில இடங்களில் மழை நீர் போக முடியாமல் தேங்கி நிற்பதை காணமுடிந்தது.

சென்னை நகரின் பல இடங்களில் பெய்து வரும் மழையால் கிணறுகள் நிரம்பி வருகின்றன. நிலத்தடி நீர்மட்டமும் உயருகிறது. இதேபோல சென்னையை யொட்டிய புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.

வீடுகளில் உள்ள கிணறுகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மளமள வென்று நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது என்ற மகிழ்ச்சியில் காணப்படுகிறார்கள்.

குறிப்பாக சென்னையில் பெரம்பூர், மாதவரம், கொடுங்கையூர், புழல், செங்குன்றம், மதுரவாயல், ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல், தாம்பரம், மடிப்பாக்கம், வேளச்சேரி, பல்லாவரம், புழுதிவாக்கம், பள்ளிக்கரணை, திருவான்மியூர் உள்ளிட்ட பல இடங்களில் விடிய விடிய மழை நீடித்தது.

தொடர் மழையால் சென்னை நகரம் குளிர்ச்சியுடன் காணப்படுகிறது. மண்ணில் ஈரப்பதம் ஏற்பட்டு இருப்பதால் குளிர்ந்த காற்றும் வீசுகிறது.



Tags:    

Similar News