வழிபாடு
மீனாட்சி அம்மன்

53 ஆண்டுகளுக்கு பிறகு மீனாட்சி அம்மன் கோவிலில் சாயரட்சை கட்டளை பூஜை

Published On 2021-12-02 07:38 GMT   |   Update On 2021-12-02 07:38 GMT
53 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் மதுரை ஆதீனம் சார்பில் மீனாட்சி அம்மன் கோவிலில் சாயரட்சை கட்டளை பூஜை நடைபெற தொடங்கியது.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

இந்த கோவில் ஆகம விதிப்படி தினசரி காலை 6 மணிக்கு உஷாக்கால பூஜை, 9 மணிக்கு காலசந்தி கால பூஜை, 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6 மணிக்கு சாயரட்சை கட்டளை பூஜை, இரவு 8 மணிக்கு 2-ம் கால பூஜை, 9 மணிக்கு அர்த்த ஜாம பூஜை ஆகியவை மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு நடத்தப்பட்டு வருகிறது.

இதில் மாலை 6 மணிக்கு நடக்கும் சாயரட்சை கட்டளை பூஜை 1968-ம் ஆண்டுக்கு முன்பு மதுரை ஆதீனம் சார்பில் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் ஆதீனம் சார்பில் இப்பூஜை நடைபெறவில்லை. எனவே கோவில் நிர்வாகமே மேற்கண்ட பூஜைகளையும் செய்து வந்தது.

இந்த நிலையில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் இறந்த பிறகு 293-வது ஆதீனமாக ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றார்.

அவரது ஆலோசனையின் பேரில் 53 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் மதுரை ஆதீனம் சார்பில் மீனாட்சி அம்மன் கோவிலில் சாயரட்சை கட்டளை பூஜை நேற்று (புதன்கிழமை) முதல் நடைபெற தொடங்கியது.

தினசரி நடக்கும் இப்பூஜையின்போது அம்மன் சுவாமி சன்னதிகளில் அபிஷேகம் செய்தல் மற்றும் நெய்வேத்திய கைங்கரியம் நடக்கும்.

மேற்கண்ட தகவலை கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News