செய்திகள்
வாக்காளர் பட்டியல்.

வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள் பெயரை நீக்க வேண்டும் - அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்

Published On 2021-09-26 09:08 GMT   |   Update On 2021-09-26 09:08 GMT
தொகுதி வாரியாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் புதிய மாறுதல் ஏற்கப்பட்டுள்ளன.
திருப்பூர்:

தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி 1,500க்கும் அதிகமான வாக்காளர் உள்ள ஓட்டுச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் 2,493 ஓட்டுச்சாவடிகள் இருந்த நிலையில் 19 சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. 

பல்லடம் தொகுதியில் - 410 ஓட்டுச்சாவடிகள், திருப்பூர் வடக்கு - 373, அவிநாசி - 313, தாராபுரம் - 298, காங்கயம் - 295, உடுமலை - 294, மடத்துக்குளம் - 287, திருப்பூர் தெற்கு - 242 தொகுதிகள் அமைந்துள்ளன. மாவட்ட அளவில் 32 ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. 48 சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டு 226 சாவடிகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தொகுதி வாரியாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் புதிய மாறுதல் ஏற்கப்பட்டுள்ளன. இந்தநிலையில்  கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டம்  கலெக்டர் வினீத் தலைமையில் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் முருகதாஸ் வரவேற்றார். டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி, ஆர்.டி.ஓ., ஜெகநாதன், அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

இதில் அரசியல் கட்சியினர் பேசுகையில், ‘ஓட்டுச்சாவடி மாற்றம் தொடர்பாக  தொகுதி வாரியாக பட்டியல் வழங்க வேண்டும். இறந்த வாக்காளர் பெயர் நீக்கம் கோரி விண்ணப்பித்தாலும் உரிய நடவடிக்கை இல்லை. குடும்ப உறுப்பினர் கையெழுத்துடன் விண்ணப்பித்தாலும் பெயர் நீக்கம் செய்யப்படாமல் இருக்கின்றன. 

இறப்பு பதிவு அலுவலர் மூலம் சரிபார்த்து இறந்தவர் பெயரை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
Tags:    

Similar News