செய்திகள்
ராமதாஸ்

2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஒரு கிலோ அரிசி இலவசம்- ராமதாஸ்

Published On 2019-11-04 09:24 GMT   |   Update On 2019-11-04 09:24 GMT
பசுமை தாயகம் சார்பில் 4 நாட்கள் 2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு ஒரு கிலோ தரமான அரிசி வழங்கப்படும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு, 10 மாதங்கள் நிறைவடைந்து விட்டாலும் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி பிளாஸ்டிக் குப்பைகளின் உருவாக்கமும் அதிகரித்து வரும் சூழலில், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகள் பற்றி நினைத்துப் பார்க்கவே அச்சமாகவுள்ளது.

தமிழ்நாட்டில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் தாள், தட்டு, கைப்பை, உறிஞ்சிகள் ஆகியவற்றை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் கடந்த 1.1.2019 முதல் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் திரையரங்குகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் விழிப்புணர்வு படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. விளம்பரங்கள் செய்யப்பட்டன. இவ்வளவுக்குப் பிறகும் பிளாஸ்டிக் பயன்பாடு மகிழ்ச்சியளிக்கும் அளவுக்கு குறையவில்லை.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறையாததற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் இரு காரணங்கள் மிகவும் முக்கியமானவை ஆகும். முதலாவது, பல பத்தாண்டுகளாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வரும் மக்கள், அவற்றை தங்களின் வாழ்வில் ஒருங்கிணைந்த அம்சமாக கருதுகின்றனர். அவற்றுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துவதில் நடைமுறை சிக்கலும், வசதி குறைவும் உள்ளன.


இரண்டாவது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பயன் படுத்துவது சற்று செலவு பிடிக்கும் வி‌ஷயமாகும். இந்த இரு தடைகளையும் தகர்த்து பிளாஸ்டிக் தடையை முழுமையாக செயல்படுத்த வேண்டியது அனைவரின் கடமையும் ஆகும்.

தெலுங்கானா மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வெகுவிரைவில் தடை செய்யப்பட உள்ளன. அதற்கு மக்களைத் தயார்ப்படுத்தும் வகையில், அந்த மாநிலத்தின் முளுகு மாவட்டத்தில் ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்தால் ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை அந்த மாவட்ட கலெக்டர் நாராயணரெட்டி அறிவித்தார்.

மாவட்டத்தின் 174 கிராமங்களில் 10 நாட்களுக்கு செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் மூலம் பல டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. ஆந்திராவில் சில இளைஞர்கள் தனிப்பட்ட முறையில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு அரிசி தரும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த முடியும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மாவட்டத் தலை நகரங்களில் வரும் 9, 10 மற்றும் 16, 17 ஆகிய வார இறுதி நாட்களில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் முகாம்கள் நடத்தப்படும்.

2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு ஒரு கிலோ தரமான அரிசி வழங்கப்படும். இந்தத் திட்டத்தை கிராம அளவிலும் விரிவாக செயல்படுத்தி, பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News