வழிபாடு
சிவபெருமானின் ஆனந்த நடனம்

சிவபெருமானின் ஆனந்த நடனம் புரிந்த கதை

Published On 2022-04-11 05:33 GMT   |   Update On 2022-04-11 05:33 GMT
ஆனந்த நடனத்தினை உலக மக்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அத்திருவுருவை பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதனும் சிலையாக வடித்தனர்.
முன்னொரு காலத்தில் திரேதாயுகா என்ற பெண் இருந்தாள். சிறந்த பார்வதிதேவியின் சிறந்த பக்தை. திருமண வயது வந்ததும் திருமணம் நடந்தேறியது. திருமணமான நாலாவது நாளில்தான் சாந்திமுகூர்த்தம் நடத்துவது அன்றைய நாளின் வழக்கம்.

ஆனால், திருமணமான மூன்றாவது நாளே அவள் கணவன் இறந்துவிட்டான். அழுது அலறி துடித்த திரேதாயுகா பார்வதிதேவியிடம் முறையிட்டாள். கைலாயத்திலிருந்த பார்வதி காதில் அவள் முறையீடு கேட்க, அவள் கணவனுக்கு உயிர்பிட்சை கொடுப்பேன் என சபதம் செய்ய, அதைக்கேட்ட சிவன், எமலோகத்தில் இருக்கும் எமனை பார்க்க, எமனும் திரேதயுகா கணவனின் உயிரை திருப்பி அளித்தான். பார்வதியும், சிவனும் தம்பதி முன் தோன்றி ஆசி அளித்த நாள் இந்த ஆருத்ரா தரிசன நாளாகும்.

தாருகாவனத்தில் வசித்த வேதத்தை கற்றதால் மமதை கொண்ட முனிவர்கள் சிலர் , கர்மாவே கடவுள், அதற்கு மிஞ்சியது ஏதுமில்லை. ஒருவனின் கர்ம வினைப்படியே அவனின் வாழ்க்கை அமையும். கடவுளால்கூட ஏதும் செய்யமுடியாது என சொல்லி திரிந்தனர்.

இவர்களின் கர்வத்தை அடக்க சிவன் பிட்சாடனாராகவும், விஷ்ணு மோகினி வேடம் கொண்டு முனிவர்கள் முன் சென்றார். மோகினியின் அழகில் மயங்கி முனிவர்களும், பிட்சாடனர் அழகில் மயங்கி முனிவர்களின் மனைவிகளும் சென்றனர். இதனால் முனிவர்களது தவம் பாதிக்கப்பட்டதால், மாபெரும் வேள்வி ஒன்றை நடத்தினர்.

கர்வமும், தவ வாழ்வும் கலைந்த நிலையில் வேள்வியில் பிழை ஏற்பட்டு வேள்வி தீயிலிருந்து புலி ஒன்று உருவாகிட்டுது. அதை அந்த பிசாடனர்மேல் ஏவினர். தன்னை நோக்கி வந்த புலியை அடக்கி, அதன் தோலை, தன் இடைக்கச்சையாக கட்டிக்கொண்டார் பிட்சாடனர் வேடம் கொண்ட சிவன்.

அடுத்தடுத்து மான், நெருப்பை வேள்வியிலிருந்து உண்டாக்கி அதை பிட்சாடனர்மேல் ஏவ, அதையும் வீரியமில்லாததாக்கி, தன் கைகளில் ஏந்திகொண்டார் பெருமான். அடுத்து யானை வர அதையும் கொன்று அதன் தோலை மேலாடையாக போட்டுக்கொண்டார். அடுத்து தங்களது முழு ஞானத்தையும் வேள்வியில் இட்டு, அதன்மூலம், முயலகன் என்ற அரக்கனை உண்டாக்கி, சிவன்மேல் ஏவினர். முயலகனை அடக்கி, தன் காலடியில் அழுத்தி வைத்துக்கொண்டனர்.

இத்தனைக்கு பிறகு புத்தி வந்த முனிவர்கள், சிவனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பதை உணர்ந்து சிவனை பணிந்து, தங்களை மன்னிக்க வேண்டி நின்றனர். அவர்களை மன்னித்து அருளி, மோகினி வேடத்திலிருந்த விஷ்ணு புல்லாங்குழல் வாசிக்க, நந்தி மேளம் கொட்ட, சிவன் ஆனந்த நடனம் புரிந்தார். சிவனின் நடனம் கண்டு தாருகாவனமே மகிழ்ந்த நாள் இந்த ஆருத்ரா தரிசன நாளாகும்.

பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த விஷ்ணு, சிவனின் தாருகாவனத்து சிவத்தாண்டவத்தை நினைத்து ஒருநாள் மகிழ்ந்திருந்தார். விஷ்ணுவின் மகிழ்ச்சியை கவனித்த ஆதிசேஷன் என்னவென்று விசாரிக்க, அந்த அற்புதத்தை விஷ்ணு விவரிக்க, அதைக்கேட்ட, ஆதிசேஷனுக்கும் அந்த நடனத்தை காண ஆவல் ஏற்பட்டு, இடுப்புக்கு மேலான உடல் மனிதனாகவும், இடுப்புக்கு கீழான உடல் பாம்பாகவும் மாறி, பதஞ்சலி என்ற பெயர்கொண்டு பூலோகம் வந்து கடும்தவம் செய்தார்.

தவத்தை மெச்சிய சிவன், பதஞ்சலி உன்னைப் போன்றே வியாக்ரபாதனும் என் ஆடலைக் காண ஆவல் கொண்டுள்ளான். நீங்கள் இருவரும் தில்லைவனம் என்ற சிதம்பரத்திற்கு வாருங்கள் அங்கே உங்கள் ஆவல் நிறைவேறும் என்றுக்கூறி மறைந்தார். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நான்னாளில் மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் தில்லையில் ஆடிக்காட்டினார்.

அந்த ஆனந்த நடனத்தினை உலக மக்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அத்திருவுருவை பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதனும் சிலையாக வடித்தனர்.
Tags:    

Similar News