செய்திகள்
நளின்குமார் கட்டீல்

காங்கிரசின் கபட போராட்டத்தை விவசாயிகள் நம்ப மாட்டார்கள்: நளின்குமார் கட்டீல்

Published On 2020-09-30 01:54 GMT   |   Update On 2020-09-30 01:54 GMT
காங்கிரஸ் தலைவர்களின் கபட போராட்டத்தை உண்மையான விவசாயிகள் நம்ப மாட்டார்கள். எனது விளைபொருட்கள் எனது உரிமை என்ற நிலை விவசாயிகளுக்கு ஏற்பட வேண்டும் என்பது பா.ஜனதாவின் விருப்பம் என்று கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

முதல்-மந்திரி எடியூரப்பா, விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தி அவர்களின் மனதை வென்றவர். ஆனால் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் விவசாயிகளின் நிலங்களை முறைகேடு செய்து, இப்போது முதலை கண்ணீர் வடிக்கிறார்கள். அப்பாவி விவசாயிகளை திசை திருப்ப அவர்கள் முயற்சி செய்கிறார்கள். காங்கிரஸ் தலைவர்களின் கபட போராட்டத்தை உண்மையான விவசாயிகள் நம்ப மாட்டார்கள். எனது விளைபொருட்கள் எனது உரிமை என்ற நிலை விவசாயிகளுக்கு ஏற்பட வேண்டும் என்பது பா.ஜனதாவின் விருப்பம்.

விவசாயிகளுக்கான ஆதரவான வேளாண் சட்டங்களால், தங்களின் விளைபொருட்களை எங்கு விற்பனை செய்ய வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்வார்கள். புதிய சட்டங்களால் வேளாண்மை சந்தைகள் மூடப்படும் என்று கூறுவது முழு பொய். விவசாயிகள் எங்கு வேண்டுமானாலும் விளைபொருட்களை விற்பனை செய்துகொள்ள அனுமதிப்பது தவறா?.

பிரதமர் மோடி அறிவித்துள்ள சுயசார்பு இந்தியா திட்டத்தின் ஆணிவேர்களாக விவசாயிகள் உள்ளனர். விவசாயிகள் பலம் வாய்ந்தவர்களாக இருந்தால் நாடு மேலும் வலுவடையும். அதற்காக விவசாயிகள் முதலில் சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும். புதிய வேளாண் சட்டங்களின் நோக்கமே அது தான்.

இவ்வாறு நளின்குமார் கட்டீல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News