செய்திகள்
கொரோனா வைரஸ்

தர்மபுரி மாவட்டத்தில் 243 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-05-08 10:54 GMT   |   Update On 2021-05-08 10:54 GMT
தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,384 ஆக அதிகரித்துள்ளது.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சளி, காய்ச்சல், இருமல் பாதிப்பு உள்ளவர்களுக்கு பரிசோதனை முகாம்களும் மாவட்டம் முழுவதும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று தர்மபுரி மாவட்டத்தில் மொரப்பூர், வகுத்தானூர், அண்ணாமலைப்பட்டி, நவலை, பெரமாண்டப்பட்டி, செங்குட்டை, சாமாண்டஹள்ளி பகுதிகளைச் சேர்ந்த 25 பேர் உள்பட 243 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தொற்று கண்டறியப்பட்டவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை முகாமில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 1,380 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனை மற்றும் முகாம்களில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 238 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இந்த நிலையில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 243 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,384 ஆக அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 71 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News