செய்திகள்
மழை நீரில் சேதமடைந்த நெற்பயிர்கள்

விருத்தாசலம் பகுதியில் தொடர் மழை- 1,000 ஏக்கர் நெற்பயிர் முளைத்தது

Published On 2021-01-17 07:26 GMT   |   Update On 2021-01-17 07:26 GMT
விருத்தாசலம் பகுதியில் கடந்த 1 வாரமாக பெய்து வரும் தொடர் மழையால் 1,000 ஏக்கர் நெற்பயிர் முளைத்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, கம்மாபுரம், வேப்பூர், மங்கலம்பேட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் அடுத்தடுத்த வந்த 2 புயல்களால் கன மழை கொட்டி தீர்த்தது. தற்போது பெய்து வரும் மழையால் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி நெய் பயிர்கள் அழுக தொடங்கி உள்ளது.

மேலும் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்களில் தற்போது 5 அடிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதனால் நெல் மணிகள் அனைத்தும் நீரில் மூழ்கியது. சுமார் 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிரிடப்பட்டு இருந்து நெற்கதிர் தற்போது மழையால் முளைத்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் கஷ்டப்பட்டு விளைவித்த பயிர்கள் வீணாகி வருவதால் சாப்பிடக் கூட மனம் வரவில்லை. இதனால் பொங்கல் பண்டிகையை கூட கொண்டாடவில்லை. ஒரு ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் செலவு செய்து உள்ளோம். தொடர் மழையினால் செலவு செய்ததற்கு கூட மகசூல் கிடைப்பது மிக கடினம்.

எனவே விருத்தாசலம் பகுதி விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணமாக ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News