ஆன்மிகம்
கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

Published On 2020-08-08 04:46 GMT   |   Update On 2020-08-08 04:46 GMT
ஆடி வெள்ளியைமுன்னிட்டு கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பல கோவில்களின் வெளியே நின்று பக்தர்கள் மனமுருகி அம்மனை வழிபட்டு சென்றனர்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக நம்பப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் அதிகளவு திருவிழாக்கள் நடைபெறு வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்கள் மூடப்பட்டு உள்ளன. எனவே கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.

ஆடி 4-வது வெள்ளியைமுன்னிட்டு கோவையில் உள்ள கோனியம்மன், தண்டுமாரியம்மன், புலியகுளம் மாரியம்மன், ராமநாதபுரம் முத்தியம்மன் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், விபூதி, குங்குமம், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆனால் பக்தர் களுக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை.

ஆடி வெள்ளியை முன்னிட்டு டி.கே. மார்க்கெட்டில் உள்ள பிளேக் மாரியம்மனுக்கு சந்தன அலங்காரமும், கெம்பட்டி காலனி வனபத்ரகாளியம்மனுக்கு வளையல் அலங்காரமும், பாப்பநாயக்கன்பாளையம் கண்ணனூர் மாரியம்மனுக்கு சந்தன அலங்காரத்திலும், காட்டூர் முத்துமாரியம்மன் மஞ்சள் அலங்காரத்திலும், மசக்காளிபாளையத்தில் உள்ள பட்டத்து ஈஸ்வரி கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். கோவில் நிர்வாகத்தினர் மட்டும் அம்மனை வழிபட்டனர்.

கோனியம்மன் உள்ளிட்ட பல கோவில்களின் வெளியே நின்று பக்தர்கள் மனமுருகி அம்மனை வழிபட்டு சென்றனர். அவர்கள் கொரோனா தொற்று ஒழிந்து, மக்கள் நோய்நொடியின்றி வாழ வேண்டினர்.

கணபதியை அடுத்த சின்னவேடம்பட்டி உடையாம்பாளையம் பார்க் டவுன் பகுதியில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்குள்ள அம்மனுக்கு ஆடி வெள்ளியைமுன்னிட்டு எலுமிச்சை பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கணபதி மணியகாரம்பாளையம் பிரிவில் உள்ள சூலக்கல் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு வழிபாடுகள் நேற்று காலை முதல் மாலை நடைபெற்றது.

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி, சோமனூர் மாகாளி அம்மன், மாரியம்மன் ஆகிய அம்மன் கோவில்களில் நேற்று ஆடி 4-வது வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. துவம்பள்ளி எம்.ராயர்பாளையம் மாரியம்மன், ராமாட்சியம்பாளையம் மாகாளியம்மன் ஆகிய ஆலயங்களில் அம்மனுக்கு திரவிய அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அம்மனை தரிசனம் செய்தனர். 
Tags:    

Similar News