செய்திகள்
அமைச்சர் காமராஜ்

விலையேற்றம் நீடித்தால் ரேஷன் கடைகளில் வெங்காயம் வழங்க நடவடிக்கை - அமைச்சர் காமராஜ்

Published On 2020-10-26 09:24 GMT   |   Update On 2020-10-26 09:24 GMT
வெங்காயம் விலையேற்றம் நீடித்தால் ரேஷன் கடைகளில் வெங்காயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அருகே கிடாரம்பட்டியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை உணவுத்துறை அமைச்சர் காமராஜ், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கருடன் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு களத்துடன் கூடிய நிரந்தர கட்டிடம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளன. மத்திய அரசு நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் மட்டுமே அனுமதி வழங்கி உள்ளது. மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகரிக்க அனுமதி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மத்திய குழுவினர் நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு செய்ய வருகிறார்கள். ஆய்வுக்கு பின் அனுமதி கிடைக்கும். ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை வைப்பதில் சிக்கல்கள் தீர்ந்த பின் இத்திட்டம் நடைமுறைக்கு வரும். அதுவரை பழைய முறையிலேயே ரேஷன் அட்டைகளை ஸ்கேன் செய்து பொருட்களை வாங்கலாம்.

பண்ணை பசுமைக் கடைகளில் பெரிய வெங்காயம் ரூ.45-க்கு வழங்கப்பட்டு வருகிறது. வெங்காய விளைச்சல் உள்ள இடத்தில் மழை கூடுதலாக பெய்த காரணத்தினால் வெங்காயம் கொள்முதல் செய்தல், எடுத்து வருதல் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளது. வெங்காய விலை ஏற்றம் தற்காலிகமானதாகும். அரசு இதனை கண்காணித்து வருகிறது. எனினும் இந்த விலையேற்றம் தொடர்ந்தால் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வெங்காயம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News