செய்திகள்
டிரைவ்-இன் தடுப்பூசி மையம்

வாகனத்தை விட்டு இறங்க தேவையில்லை... தடுப்பூசி திட்டத்தில் புதிய முயற்சி

Published On 2021-05-08 14:45 GMT   |   Update On 2021-05-08 14:48 GMT
தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகள் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன.
புவனேஸ்வர்:

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தினசரி தொற்று எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. தடுப்பூசி திட்டம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது 18 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 

தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகள் மற்றும்  விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன. சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பணியிடத்திலேயே தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. 



இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் சோதனை முயற்சியாக வாகன நிறுத்துமிடத்தில் டிரைவ்-இன் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வர் மாநகராட்சி சார்பில் எஸ்பிளனேடு மால் வாகன நிறுத்துமிடத்தில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாகனங்களை பார்க்கிங் செய்வதற்காக வரும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு 2வது டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.  



வாகனங்களில் வருவோர் கீழே இறங்க தேவையில்லை. மருத்துவ பணியாளர்கள் வாகனம் அருகே சென்று அவர்களின் முந்தைய தடுப்பூசி நிலவரத்தை சரிபார்த்து, அதற்கு ஏற்ப இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துகின்றனர்.

இந்த திட்டத்திற்கு கிடைக்கும் ஆதரவைப் பொருத்து, மக்கள் கூடும் பிற இடங்களில் செயல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News