செய்திகள்
போயிங் 737 மேக்ஸ் முதல் பயணம்

20 மாத தரையிறக்கத்துக்கு பின் முதல் பயணத்தை தொடங்கிய போயிங் 737 மேக்ஸ் விமானங்கள்

Published On 2020-12-09 21:23 GMT   |   Update On 2020-12-09 21:23 GMT
இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் நிகழ்ந்த கோர விபத்துகளைத் தொடர்ந்து போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் தரையிறக்கப்பட்டன.
பிரேசிலா:

2018 ஆம் ஆண்டு ’போயிங் 737 மெக்ஸ் 8’ ரக விமானம் இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 189 பேர் உயிரிழந்தனர். அதேபோல், இதே ரக விமானம் கடந்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி மற்றொரு விபத்தை சந்தித்தது. அந்த விபத்தில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். 

இந்த இரண்டு மிகப்பெரிய விபத்துகளைத் தொடர்ந்து ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது. 

ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், இந்தியா, சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், கனடா உள்ளிட்ட நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்தன. இதன் காரணமாக போயிங் நிறுவனத்துக்கும், அமெரிக்க அரசுக்கும் அழுத்தம் அதிகரித்தது. 

கடும் அழுத்தங்களைத் தொடர்ந்து, போயிங் 737 மேக்ஸ் 8 மற்றும் போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ம் தேதி இந்த விமானங்கள் அனைத்தும் (837) தரையிறக்கப்பட்டன. 

அமெரிக்க விமான போக்குவரத்து வரலாற்றில் அதிக அளவிலான விமானங்களின் தரையிறக்கம் இதுவே முதல்முறை ஆகும். அதன்பின்னர் விமானத்தின் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 

இதையடுத்து, ஆய்வுகள் திருப்திகரமாக இருந்ததால் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை வர்த்தக ரீதியில் இயக்குவதற்கு மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் கடந்த மாதம் 18-ம் தேதி அனுமதி சான்றிதழ் வழங்கியது.

விமானத்தின் புதுப்பிக்கப்பட்ட விமான கட்டுப்பாட்டு அமைப்பை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே இந்த அனுமதி சான்றிதழ் வழங்கப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் போயிங் நிறுவனம் தெரிவித்தன.   

இந்நிலையில், 20 மாத இடைவெளிக்கு பின்னர் நேற்று முதல் முறையாக போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் தனது முதல் பயணத்தை தொடங்கியது. போயிங் 737 மேக்ஸ் விமானத்தின் முதல் பயணம் பிரேசில் நாட்டில் நடைபெற்றது.

பிரேசில் நாட்டின் கோல் விமான நிறுவனம் மூலம் சோஓ பாலோ நகரில் இருந்து அலிக்ரி நகருக்கு வர்த்தகரீதியில் போயிங் 737 மேக்ஸ் விமானம் இயக்கப்பட்டது. 186 இருக்கைகள் கொண்ட அந்த விமானத்தில் 88 சதவிகிதம் பயணிகள் பயணம் செய்தனர். 70 நிமிட பயணத்திற்கு பின் விமானம் அலிக்ரி நகரில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

பிரேசிலை தொடர்ந்து பிற நாடுகளிலும் கூடிய விரையில் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் பயணத்தை மீண்டும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News