செய்திகள்
கண்மாயில் சிக்கிய மீன்களுடன் இளைஞர்கள்

உசிலம்பட்டி-மேலூரில் மீன்பிடி திருவிழா- 4 மாவட்ட மக்கள் பங்கேற்பு

Published On 2021-04-15 09:49 GMT   |   Update On 2021-04-15 09:49 GMT
பாரம்பரிய மிக்க மீன்பிடி திருவிழா நடத்துவதால் மழை பொழிந்து கண்மாய் நிரம்பி விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
உசிலம்பட்டி:

மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பல்வேறு காலக்கட்டங்களில் மீன்பிடி திருவிழாக்கள் விமரிசையாக நடத்தப்படும்.

இதற்காக கிராமங்களில் உள்ள கண்மாய்களில் மீன்கள் வளர்க்கப்படும். குறிப்பிட்ட நாட்கள் மற்றும் கோவில் திருவிழாவை முன்னிட்டு கண்மாய்களில் மீன்பிடிக்க கிராம மக்களுக்கு அனுமதி வழங்கப்படும். இவ்வாறு நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்து செல்வார்கள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள முதலைக்குளம் கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வழிபடுவார்கள்.

இந்த கோவிலுக்கு சொந்தமாக அருகிலேயே கண்மாய் உள்ளது. வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் நீர்நிரம்பி காணப்படும். இந்த கண்மாயில் மீன்பிடி திருவிழா வருடம்தோறும் விமரிசையாக நடத்தப்படும்.

இந்த ஆண்டு பருவமழை பெய்ததையொட்டி கண்மாய் நிரம்பி மீன்கள் பெருகின. தொடர்ந்து மீன்பிடி திருவிழா நடத்த கிராம கமிட்டி முடிவு செய்தது.

அதன்படி இன்று மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது. அதிகாலை முதலே முதலைக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர் மற்றும் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திரண்டனர்.

காலை 7 மணிக்கு மீன்பிடி திருவிழா தொடங்கியது. கிராம பெரியவர்கள் கொடியசைத்து விழாவை தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து கண்மாய்க்குள் திபுதிபுவென இறங்கிய இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் என அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் பல்வேறு ரக மீன்கள் சிக்கின.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது சருகுவலையபட்டி. இங்கு பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அங்குள்ள கம்பளிங்கன் கண்மாய் நிரம்பியதை அடுத்து மீன்கள் பெருகின. இதைத்தொடர்ந்து மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது.

தொடர்ந்து கண்மாய் கரையில் தயாராக நின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு சாதி, மத பேதமின்றி மீன்களை பிடிக்க இறங்கினர்.

இதில் நாட்டுவகை மீன்களான கட்லா, ரோகு, கெழுத்தி, கெண்டை, குரவை உள்ளிட்ட மீன்கள் சிக்கின. அவற்றை பொதுமக்கள் உற்சாகமாக பிடித்தனர்.

இங்கு பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளில் சமைத்து இறைவனுக்கு படைத்து உண்ணுவர்.

இதுபோன்று பாரம்பரிய மிக்க மீன்பிடி திருவிழா நடத்துவதால் மழை பொழிந்து கண்மாய் நிரம்பி விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.


Tags:    

Similar News