செய்திகள்
கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசுகளை குவித்த கோவில் காளை திடீர் மரணம்- கிராம மக்கள் அஞ்சலி

Published On 2021-02-21 05:39 GMT   |   Update On 2021-02-21 05:39 GMT
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசுகளை குவித்த கோவில் காளை உடல்நல குறைவால் இறந்தது. இதற்கு பெண்கள் உட்பட கிராம மக்கள் கும்மியடித்து, குலவையிட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட சின்னம்மன் கோவில் கிராமத்து காளை உடல்நல குறைவால் இறந்தது. இதற்கு பெண்கள் உட்பட கிராம மக்கள் கும்மியடித்து, குலவையிட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இந்த காளை ஊருக்குள் குழந்தை போல் செல்ல பிள்ளையாக வலம் வந்ததாக கூறி கிராம மக்கள் பலரும் வந்திருந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஊருக்கு பெருமை சேர்த்த இந்த காளை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக்கட்டுகளில் பங்கு பெற்று சீறிப்பாய்ந்து யாரிடமும் பிடிபடாமல் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை பரிசுகளாக பெற்றுள்ளது.

இந்த காளை இறந்த செய்தி கேட்டு பக்கத்து கிராமத்தை சேர்ந்த பலரும் வந்து மாலை அணிவித்து நெற்றி திலகமிட்டு சென்றனர். இந்த காளையை குழந்தைகள் கயிறு பிடித்து இழுத்து செல்லும் அளவிற்கு சின்ன குழந்தை போல நடந்து கொள்ளும்.

அதே சமயம் காலில் சலங்கை கட்டினால் ஜல்லிக்கட்டிற்கு செல்கிறோம் என்பதை உணர்ந்து சீறிபாயும் என கூறி பலரும் நெகிழ்ந்து கண்ணீர் விட்டனர்.

பின்னர் இந்த காளையை கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து சென்று ஊருக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் அடக்கம் செய்தனர்.

Tags:    

Similar News