செய்திகள்
குப்பைகளை கொட்ட வந்த நகர பஞ்சாயத்து வண்டியை வழிமறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய காட்சி

திருச்செந்தூர் அருகே நகர பஞ்சாயத்து குப்பை வண்டியை மறித்து போராட்டம்

Published On 2020-11-30 15:01 GMT   |   Update On 2020-11-30 15:01 GMT
திருச்செந்தூர் அருகே, கிராமத்தில் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து நகர பஞ்சாயத்து குப்பை வண்டியை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
திருச்செந்தூர்:

திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து பகுதியில் உள்ள குப்பைகளை, ராணிமகாராஜபுரம் பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து குப்பைகளை, தங்கள் கிராமத்தில் கொட்டுவதால் நஞ்சை விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. அதில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் உயிரிழக்கின்றன. அதேபோல் பொதுமக்களுக்கு நோய் பரவவும் வாய்ப்புள்ளது என்றும், அதனால் ராணிமகாராஜபுரம் பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். அதேபோல் இனிமேல் இந்த பகுதியில் குப்பைகளை கொட்ட கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழர் கழகம் சார்பில், மாநில பொது செயலாளர் சரவணன் தலைமையில், மாவட்ட இளைஞரணி தலைவர் நாராயணன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குப்பை கொட்ட வந்த திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து வாகனத்தை மறித்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன், நகர பஞ்சாயத்து அலுவலர் பாண்டி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிமேல் இந்த பகுதியில் குப்பைகளை கொட்ட மாட்டோம் என்றும், ஏற்கனவே கொட்டிய குப்பைகளை சரிசெய்து தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News