ஆன்மிகம்
ராமேசுவரம் கோவிலில் 22 புனித தீர்த்தங்கள்

ராமேசுவரம் கோவிலில் 22 புனித தீர்த்தங்கள் திறப்பது எப்போது?

Published On 2021-10-20 05:38 GMT   |   Update On 2021-10-20 08:56 GMT
காசிக்கு நிகராக கருதப்படும் புண்ணிய தீர்த்தமான அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவது குடும்ப கஷ்டங்களை கழித்து நல்ல பலன் கிடைக்கும் என்பதை ஐதீகமாக கருதுகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலம் இந்தியாவில் தமிழகத்தில் தெற்கோடியில் ராமேசுவரம் அமைந்துள்ளது. ராமேசுவரத்தில் இந்தியாவில் அமைந்துள்ள 12 ஜோதிர் லிங்கத்தில் ஒரு ஜோதிலிங்கம் ராமநாதசுவாமி கோவிலில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் ராமாயணம் வரலாற்று தொடர்புடையது. இலங்கையை ஆண்டு வந்த ராவணன் இந்தியாவிலிருந்து ராமர் மனைவி சீதையை கடத்திச் சென்றார். இலங்கைக்கு கடத்தி சென்று தன் மனைவியை ராமர் மீட்டு வரும்போது ராமேசுவரத்தில் அவர் பாதம் பட்டதாலும், ராமர் சீதையுடன் சிறப்பு பூஜை செய்ததால் புண்ணிய தலமாக பக்தர்கள் கருதுகின்றனர்.

இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் உள்பட உலக நாடுகளிலிருந்து ராமர் பாதம் பட்ட ராமேசுவரம் கோவிலில் அமைந்துள்ள ஜோதி லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். இங்கு வருகை தரும் பக்தர்கள் காசிக்கு நிகராக கருதப்படும் புண்ணிய தீர்த்தமான அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவது குடும்ப கஷ்டங்களை கழித்து நல்ல பலன் கிடைக்கும் என்பதை ஐதீகமாக கருதுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் கோவிலில் அமைந்துள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் ஒவ்வொரு தீர்த்தமும் பயன் பாட்டின் தன்மை உள்ளது. இதனால் அக்னி தீர்த்த கடலில் நீராடி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி பின்னர் சிவனை வழிபடுவதை மிகவும் ஐதீகமாக கருதுகின்றனர். அதுமட்டுமல்லாமல் குடும்பத்தின் நலனுக்காகவும், வாரிசுகளின் நலனுக்காகவும் முன்னோர்களின் நினைவுக்காகவும் ராமேசுவரம் புண்ணிய தலமான அக்னி தீர்த்த கடலில் சிறப்பு பூஜைகள் செய்வதை மிகவும் ஐதீகமாக கருதுகின்றனர்.

இந்த நிலையில் 2019-ம் ஆண்டு மார்ச் 24 -ந் தேதி முதல் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலிலும், அங்கு அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களிலும் மற்றும் புனித தீர்த்தமான அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நிம்மதியாக புனித நீராட முடியாமல் வேதனை அடைந்து வருகின்றனர்.

தமிழகம் மற்றும் இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்த கொரோனா தொற்று நோய் காரணமாக தமிழக அரசு அவ்வப்போது சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஏறத்தாழ 19 மாதங்களாக தொற்று காரணமாக தமிழக அரசு அனைத்து துறைகளிலும் சில கட்டுப்பாடுகள் விதித்து பின்னர் சில தளர்வுகளை அளித்து வந்தது.

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டும் அனுமதி அளித்துள்ளது. கோவில்களில் சொந்தமான புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடுவதற்கு தொடர்ந்து தடை விதித்தது. அதுபோல கோவில்கள் அமர்ந்துள்ள கடலோர பகுதியில் கடலில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு அவ்வப்போது தடை விதித்து வருகிறது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் புண்ணிய ஸ்தலமாக கருதப்படும் பக்தர்கள் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அமைந்துள்ள 22 புனித தீர்த்தத்தில் கடந்த 19 மாதங்களாக புனித தீர்த்தம் நீராட முடியாமல் மிகவும் வேதனை அடைந்து வருகின்றனர்.

இந்த புண்ணிய தலத்தில் புனித தீர்த்தங்கள் திறக்கப்பட்டால் மட்டுமே ராமேசுவரத்திற்கு பக்தர்களின் வருகை அதிகமாக காணப்படும். பக்தர்களின் வருகையால் கோவில்களில் புனித தீர்த்தத்தில் இறைத்து ஊற்றும் தனியார் பணியாளர்கள் மற்றும் ராமேசுவரம் கோவிலை சுற்றியுள்ள சிறு வியாபாரிகள் மற்றும் ஏறத்தாழ ராமேசுவரம் பகுதியில் அமைந்துள்ள 200-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் புரோகிதர்கள் என 2 ஆயிரம் குடும்பங்களுக்கு மேலாக இங்கு வரும் பக்தர்களை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 19 மாதங்களாக பக்தர்களின் வருகை மிகவும் குறைந்து காணப்பட்டதால் இந்த 2000 குடும்பங்களில் ஏறத்தாழ 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு குடும்ப செலவுக்கு கூட வழியில்லாமல் கடன் வாங்கி பிழைப்பு நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்த இந்த நிலை தேர்தல் வாக்குறுதியில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் புண்ணிய ஸ்தலமான ராமேசுவரம் கோவிலில் புனித தீர்த்தங்கள் திறக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்று வரை தீர்த்தங்கள் திறக்கப்படவில்லை என்பது பக்தர்களின் கருத்தாக உள்ளது.

அதனால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி கவனம் செலுத்தி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களை திறந்து பக்தர்கள் நீராடுவதற்கும் பக்தர்களின் வருகை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேசுவரம் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News