செய்திகள்
பாஜக முன்னாள் எம்.பி சின்மயானந்த்

முன்னாள் பாஜக எம்.பி மீது பாலியல் புகார் கூறி காணாமல் போன பெண் ராஜஸ்தானில் மீட்பு

Published On 2019-08-30 11:23 GMT   |   Update On 2019-08-30 11:23 GMT
முன்னாள் பாஜக மந்திரி சுவாமி சின்மயானந்த் மீது பாலியல் கொடுமை புகார் கூறிய பின்பு, காணாமல் போன பெண் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ஷாஜகான்பூர்:

வாஜ்பாய் அமைச்சரவையில் இணை மந்திரியாக இருந்தவர் சுவாமி சின்மயானந்த். தற்போது இவர் உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூர் 
நகரில் ஸ்வாமி சுக்தேவானந்த் சட்டக்கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார்.

இந்தக் கல்லூரியில் படித்து வரும் 23 வயது நிரம்பிய மாணவி சின்மயானந்த் மீது பாலியல் குற்றம் சாட்டி கடந்த வாரம் வீடியோ 
ஒன்றை வெளியிட்டார்.

அதில், பல பெண்களின் வாழ்க்கையை அவர் சீரழித்துவிட்டார். அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது என கூறியிருந்தார். மேலும் தனக்கு உதவி செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இருவரையும் கேட்டுக்கொண்டார். ஆனால் அப்பெண்ணின் குற்றச்சாட்டிற்கு சின்மயானந்த் வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்தார். மேலும் அவருக்கு 
எதிரான சதிச்செயலில் இதுவும் ஒரு பகுதி எனவும் அவர் கூறியிருந்தார்.

வீடியோ வெளியான மறுநாளில் இருந்து மாணவியை காணவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் தங்களது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

இந்நிலையில், காணாமல் போன மாணவி தனது நண்பருடன் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்ததை 
அறிந்த போலீசார் இன்று அவரை கண்டுபிடித்தனர். அவரை உத்திர பிரதேசத்திற்கு திரும்ப அழைத்து வருவதற்கான பணிகள் 
நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

3 முறை எம்.பியாக இருந்துள்ள 72 வயதான சின்மயானந்த் ஏற்கனவே இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகளை சந்தித்துள்ளார். 2011-ம் 
ஆண்டு அவரது ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண் ஒருவர் அவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News