செய்திகள்
ஜப்பான் கழிவுநீர் கால்வாயில் வண்ண மீன்கள்

ஜப்பான் கழிவுநீர் கால்வாய்களில் நீந்தும் வண்ண மீன்கள் - வியப்பூட்டும் வீடியோ

Published On 2019-11-04 05:50 GMT   |   Update On 2019-11-04 07:09 GMT
ஜப்பான் நாட்டில் கழிவு நீர் கால்வாயில் கூட நீர் தூய்மையாக உள்ளதால் அதில் வண்ண மீன்கள் நீந்தும் வீடியோ வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
டோக்கியோ:

உலகில் தற்போது நாகரீகம் வேகமாக வளர்ந்து வருகிறது. புதிய கண்டுபிடிப்புகள் பெருகி வரும் நிலையில் இயற்கையும் அழிந்து வருகிறது. இயற்கை பேரழிவுகளை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமையால் நீர், நிலம், காற்று ஆகியவை மாசடைந்து கொண்டே வருகின்றன.  

நதிகள் அதிகம் உள்ள நமது நாட்டிலும் பெரும்பாலான நீர்நிலைகள் மாசடைந்து வருகின்றன. பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் கடலில் கொட்டப்படுவதாலும் ரசாயன கழிவுகள் கலப்பதாலும் கடல் நீர் மாசுபட்டு பவளப்பாறைகள், மீன் இனங்கள் ஆகியவை அழிந்து வருகின்றன. மாசடைந்த நதிகளையும், நீர்நிலைகளையும் சுத்தம் செய்ய அரசு முயற்சித்து வருகிறது. 


கடந்த மார்ச் மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டு கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது இயற்கை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

நாளுக்கு நாள் நீர் நிலைகளும், கடல்களும் மாசுபடுவதை அடுத்து உலகின் பல்வேறு நாடுகளும் நீர் மாசுபாடு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.

அவ்வகையில் நீர் நிலைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதில் ஜப்பான் நாடு முன்னிலை வகிக்கிறது. ஜப்பானில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் மிகவும் சுத்தமாக உள்ளன, அதுமட்டுமல்லாது சில நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாகவும் உள்ளது. ஆம் அதில் அழகான கோய் வகை மீன்கள் நீந்துகின்றன.

கழிவுநீர் மேலாண்மையை அந்நாட்டு அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கால்வாய்கள் தூய்மையாக உள்ளதையும் அவற்றில் வண்ண மீன்கள் நீந்துவதையும் வியப்பாக பார்த்து செல்கின்றனர். 

ஜப்பான் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் மதிக்கும் நாடு. அது எப்போதும் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அங்கு சாலைகள் சுத்தமாகவும் அழகிய சமநிலை கொண்டதாகவும் உள்ளன.
Tags:    

Similar News