லைஃப்ஸ்டைல்
திருமணம்

எளிமையான திருமணங்களுக்கு மீண்டும் பாதை போட்ட கொரோனா

Published On 2020-06-01 03:06 GMT   |   Update On 2020-06-01 03:06 GMT
கொரோனா இதற்கு தற்போது புள்ளி வைத்திருக்கிறது. கோடிகளில் புரள்கிறவர்களின் இல்ல திருமண விழாவில்கூட 50 பேர்தான் கலந்து கொள்ள முடியும் என்ற நிலை வந்து விட்டது.
திருமணம் என்றாலே கோலாகலம், கொண்டாட்டாம்தான்.

இப்போதெல்லாம், வாழ்வில் ஒரு முறைதானே திருமணம் நடக்கிறது. எவ்வளவு ஆடம்பரமாக செலவு செய்தாலும் தப்பில்லை என்பதுதான் நமது மக்களின் மனோபாவமாக இருந்து வந்தது.

திருமணம் என்றால்....

நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, அலுவலக ஊழியர்களுக்கு என தனித்தனியாக அழைப்பிதழ்... மிகப்பெரிய கல்யாண சத்திரங்கள்... விதவிதமான அலங்காரங்கள்... பதாகைகள்... கட்-அவுட்டுகள், பேனர்கள்.. 2 ஆயிரம் பேருக்காவது அழைப்பு... விருந்து... இன்னிசை மழை... என தடபுடல் ஏற்பாடுகளில் குளிர்காய்ந்தார்கள்.

ஆனால் கொரோனா இதற்கு தற்போது புள்ளி வைத்திருக்கிறது. கோடிகளில் புரள்கிறவர்களின் இல்ல திருமண விழாவில்கூட 50 பேர்தான் கலந்து கொள்ள முடியும் என்ற நிலை வந்து விட்டது.

அந்தக் காலத்தில் வீட்டு வாசலில் பந்தல் போட்டு திருமணம் நடத்திய நிலையை இனி வரும் நாட்களில் பார்க்க முடிந்தாலும் வியப்பதற்கு இல்லை. அதற்கான பாதையை கொரோனா போட்டுத்தந்திருக்கிறது.

இந்த கொரோனா மனிதர்களை, மனிதர்களின் வாழ்க்கையை அந்த அளவுக்கு மாற்றிப்போட்டுக்கொண்டிருக்கிறது.

இப்படியும் ஒரு திருமணம்...

ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர் சொல்கிறார்... “ எங்கள் திருமணத்தில் பெரிய ஊர்வலம் கிடையாது. அலங்காரங்கள் இல்லை... பட்டாசுகள்.. விருந்துகள்... உறவினர்கள் கூட்டம் கிடையாது. எளிமை என்றால் அத்தனை எளிமை. ஆனால் இந்த திருமணம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று” என்று.

மணமகன் ஜோதி ரஞ்சன் சுவைன் சொல்லும்போது, “ நாங்கள் ஒரு பெரிய மண விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் கொரோனா தன் கைவரிசையை காட்டி விட்டது. இதனால் திருமணத்துக்கு நாங்கள் செலவு செய்ய திட்டமிட்டிருந்த பணத்தில் ஒரு பகுதியை கொரோனாவுக்கு எதிரான சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்த அரசுக்கு தந்து விட்டோம்” என்கிறார்.

இவர்களது மண விழாவில் அந்த பகுதியை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், வட்டார வளர்ச்சி அதிகாரி கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் விருந்தினர் கூட்டம் கிடையாது. வந்திருந்த விரல் விட்டு எண்ணத்தக்க நபர்கள் வாழ்த்தினார்கள். அவர்களுக்கு விருந்து கிடையாது. இனிப்பு மட்டுமே பரிமாறப்பட்டது.

சோதனைசாவடியில் ஒரு திருமணம்

அசாமில் ஒரு மண விழா. அசாம், மேற்கு வங்காள எல்லையில் ஒரு சோதனைசாவடியில் நடந்து இருக்கிறது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஜல்பய்குரி ஓம்பிரகாஷ் ஷாவும், அசாமின் கஜோலும் மண ஜோடி.

ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்லும்போது கட்டாய தனிமைப்படுத்தல் என்ற பிரச்சினை எழுந்ததால், இவர்களது திருமணத்தை அப்படி நடத்த வேண்டியது வந்து விட்டது. உள்ளாட்சி அமைப்பின் அறிவுறுத்தலின் பேரில் நாங்கள் இதை ஏற்க வேண்டியதாயிற்று என்கிறார் மணமகளின் தந்ை- மகேஷ் ஷா.

அசாமில் கோல்புராவில் தவ்பிக் உசேன், அபேதா பேகம் ஜோடியின் மண விழா நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் வீட்டிலேயே நடத்தப்பட்டது. 7 அல்லது 8 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் மணமகன் தவ்பிக் உசேனுக்கு இந்த எளிய திருமணத்தில் நிறைவுதான். “திருமணங்கள் இப்படித்தான் எளிமையாக நடத்தப்பட வேண்டும். பெரும் கூட்டத்தை கூட்டி, ஆரவாரம் கோலாகலம் என பெரும் செலவு செய்யாமல், நெருங்கின உறவினர்களை வைத்து நடத்துவதுதான் ஏற்றது” என்கிறார்.

மொட்டை மாடி திருமணம்

தமிழ்நாடும் இப்படிப்பட்ட திருமணத்துக்கு இனி விதிவிலக்கு இல்லை என்ற நிலை வந்து விட்டது.

சென்னையை சேர்ந்தவர் சக்திவேல். ஏ.சி. மெக்கானிக். இவரது திருமணம் தனது வீட்டின் மொட்டை மாடியில் வைத்தே நடந்து முடிந்து விட்டது. “ நாங்கள் திட்டமிட்டிருந்த செலவில் 75 சதவீதம் மிச்சம். 10 குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நாங்கள் பதிவு செய்திருந்த கல்யாண மண்டபத்தை ஊரடங்கால் மூடி விட்டனர். இதனால எளிமையாக வீட்டில் வைத்தே நடத்தி முடித்து விட்டோம்” என்கிறார் சக்திவேல்.

கேரளாவும் விதிவிலக்கல்ல...

கேரள மாநிலத்திலும் திருமணங்கள் எளிமையாக மாறி இருக்கின்றன.

அங்கு ரெபின் வின்சென்ட் கிரலன், சிலா லோனா மண விழாவும் ஏப்ரல் 15-ந் தேதியன்று பவரட்டி புனித ஜோசப் தேவாலயத்தில் 10 குடும்ப உறுப்பினர்களுடன் நடந்தது. இவர்களது திருமணம் பல மாதங்களுக்கு முன்பாக நிச்சயிக்கப்பட்ட ஒன்று.

“ ஊரடங்கால் எளிமையாக திருமணம் நடத்த வேண்டியதாயிற்று. அதைத்தவிர வேறு வழி இல்லையே. கொரோனா தொற்று முடிவுக்கு வரும் வரையில் காத்திருப்பத்தில் அர்த்தம் இல்லை. எனவே எளிமையாக திருமணத்தை நடத்தினோம்” என்கிறார் புதுமாப்பிள்ளை ரெபின் வின்சென்ட் கிரலன்.

இதையேதான் எர்ணாகுணததை சேர்ந்த தொழில் அதிபர் அலெக்ஸ் பாலும் ஒப்புக்கொள்கிறார். “கொரோனா ஒழியட்டும், அதன்பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று திருமணத்தை எப்படி ஒத்திபோடுவது? அதில் அர்த்தம் இல்லை. எங்கள் திருமணத்தை ஜூன் 15-ந் தேதி நடத்த முடிவு செய்துள்ளோம். ஒரு வருடத்துக்கு முன்னே இந்த திருமணம் நிச்சயமானது. பிரமாண்ட திருமணமாக நடத்த திட்டமிட்டோம். ஆனால் கொரோனா பரவத்தொடங்கி ஊரடங்கு வந்துவிட்டது. இந்த தொற்று பயம் எந்த நேரத்திலும் முடிவுக்கு வரப்போவதில்லை. அதற்கேற்ப எளிமையாய் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறோம்” என்கிறார் அலெக்ஸ் பால்.

கோவிலில் திருமணம்

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த ரவி கவுடா திருமணம் நிச்சயிக்கப்பட்டபடி பிரமாண்டமாக இல்லாமல், எளிமையாக ஒருகோவிலில் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி நடந்து முடிந்து இருக்கிறது. அவர் சொல்கிறார். “ எங்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டபடி ஏப்ரல் 20-ல் நடந்து விட்டது. அவ்வளவுதான். முதலில் பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் கல்யாண மண்டபத்தில் நடத்தவும், 2,500 பேர் வரையில் அழைக்கவும் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அது நடக்கவில்லை. ஆனால் நிச்சயித்த நாளில் உள்ளூர் கோவிலில் திருமணத்தை நடத்தினோம். திருமண ஏற்பாடுகளுக்காக ரூ.10 லட்சத்தை ஏற்கனவே செலவு செய்து விட்டேன். அந்தப்பணம் திரும்ப வரவில்லை. யாருமே உற்றார், உறவினர், நண்பர்கள் இன்றி திருமணம் நடத்த விரும்புவதில்லைதான். ஆனால் என்ன செய்வது?” என்கிறார் ரவி கவுடா.

சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த சிரத்தா படேல் என்பவர் மே 17-ல் திருமணம் செய்து கொள்ள இருந்தார். ஊரடங்கால் திருமணத்தை ஒத்தி போட்டு விட்டார். இதுபற்றி கேட்டபோது அவர், “நான் பகட்டான திருமணத்தை விரும்பவில்லைதான். ஆனால் குறைந்தபட்சம் எனது நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் இருக்க விரும்புகிறேன். அதற்கேற்ற வகையில் திருமணத்தை எப்போது நடத்துவது என்பதுபற்றி யோசித்து வருகிறோம்” என கூறுகிறார்.

பெற்றோர் இன்றி திருமணம்

கேரள மாநிலம், கண்ணூரில் ஏப்ரல் மாதம் 30-ந் தேதி ஆராய்ச்சி ஆய்வாளர் சைதன்யாவுக்கும், தகவல் தொழில்நுட்ப வல்லுனர் தனுஜூக்கும் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டது.

ஆனால் ஊரடங்கால் நடக்கவில்லை. கடைசியில் மே 24-ந் தேதி பெங்களூரில் மணமகளின் மாமா வீட்டில் 12 உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடந்தது. “கொரோனா ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும் என தெரியவில்லை. நிச்சயமற்ற நிலையில் காத்திருந்தும் பலன் இல்லை” என்கிறார் மணமகளின் தந்தை சுதாகரன்.

கடைசியில் திருமணத்தை மணமக்களின் பெற்றோர் நேரில் பார்க்க முடியவில்லை. வாழ்த்த முடியவில்லை. சூம் செயலியின் புண்ணியத்தால் அவர்கள் அந்த திருமணத்தை செல்போனில் பார்த்து ஆறுதல் பட்டுக்கொண்டனர்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்ககப்படுகின்றன என்றது அந்தக்காலம். திருமணங்கள் இப்போது இப்படியாக நடக்க வேண்டும் என்று தீர்மானிப்பது கொரோனா!
Tags:    

Similar News