ஆன்மிகம்
சுயம்புலிங்க சுவாமி கோவில், சுயம்புலிங்க சுவாமி

பித்ரு தோஷங்கள், குலதெய்வ சாபங்கள் தீர்க்கும் சுயம்புலிங்க சுவாமி

Published On 2020-10-07 04:01 GMT   |   Update On 2020-10-07 04:01 GMT
அமாவாசை நாட்களில் கடலில் நீராடி, சுயம்புலிங்க சுவாமி சன்னிதியில் நண்பகலில் நல்எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பித்ரு தோஷங்கள், குலதெய்வ சாபங்கள் யாவும் அகலும் என்கிறார்கள்.
தமிழகத்தின் தென்கோடியில் உவரி என்ற திருத்தலத்தில் சுயம்புலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் முன்காலத்தில் ‘பெரியசுவாமி கோவில்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைத்து சிவலிங்கங்களும் ஆவுடையுடன் கூடியே இருக்கும். அதுவே ‘அம்மை அப்பன்’ தத்துவம். ஆனால் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் மூலவருக்கு ஆவுடையார் பாகம் இல்லை.

ஆலயத்தின் வெளியில் தென்மேற்கில் கன்னி விநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் முதலில் கடலிலும், பின்னர் ஆலய எதிரில் உள்ள தெப்ப குளத்திலும் நீராடி, கன்னி விநாயகரை வழிபட வேண்டும். அதன்பிறகே மூலவரான சுயம்புலிங்க சுவாமியின் கருவறைக்குள் நுழைய வேண்டும்.

இங்கு ஈசனின் சன்னிதியில் சந்தனமே பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதுவும் சுயம்புலிங்க சுவாமியின் சிரசில் சாற்றிய சந்தனமே பிரசாதமாக பக்தர்களுக்கு தரப்படுகிறது. இந்த சந்தன பிரசாதத்தை தொடர்ந்து இங்கு ஆலயத்தில் தங்கி இருந்து 48 நாட்கள் கடலில் நீராடி, முறைப்படி ஈசனை வழிபட்டு, கருவறை தீபத்தில் நெய் சேர்த்து, அங்கு பிரசாதமாக தரப்படும் சந்தனத்தை வாங்கி உண்டு வந்தால் தீராத நாட்பட்ட நோய்களும் குணமாவதாக கூறுகிறார்கள்.

அமாவாசை நாட்களில் கடலில் நீராடி, சுயம்புலிங்க சுவாமி சன்னிதியில் நண்பகலில் நல்எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பித்ரு தோஷங்கள், குலதெய்வ சாபங்கள் யாவும் அகலும் என்கிறார்கள். பலருக்கு இக்காலத்தில் தங்கள் குலதெய்வம் யாரென்று தெரியவில்லை. இப்படிப்பட்டவர்கள் சுயம்புலிங்க சுவாமிக்கு மாவிளக்கு ஏற்றி சுயம்புலிங்க சுவாமியை தங்கள் குலதெய்வமாக ஏற்றுக்கொள்ளலாம் என்கிறார்கள். அதுமுதல் அக்குடும்பத்திற்கு குலதெய்வமாக சுயம்புலிங்க சுவாமி அருள்பாலிப்பதுடன் குடும்பத்தினரின் நல்வாழ்விற்கு துணை நிற்பார் என்கிறார்கள்.

உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் திருச்செந்தூரில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து சுமார் 48 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
Tags:    

Similar News