செய்திகள்
அஸ்வத் நாராயண்

எடியூரப்பாவை மாற்றுவது குறித்து ஆலோசனை நடக்கவில்லை: அஸ்வத் நாராயண்

Published On 2021-06-18 02:17 GMT   |   Update On 2021-06-18 02:17 GMT
கட்சியில் குழப்பங்கள் இருந்தால் அதை கட்சி மேலிடம் சரிசெய்யும். இந்த விஷயத்தில் அதிக விளக்கம் தேவை என்றால் நீங்கள் எங்கள் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரிடம் கேளுங்கள்.

பெங்களூரு :

கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஜனநாயகத்தில் விவாதங்கள், ஆலோசனைகள் அடிக்கடி நடந்து கொண்டே இருக்கின்றன. இவ்வாறு நடைபெறும் ஆலோசனைகளில் தவறு இல்லை. ஆட்சி நிர்வாகத்தை நல்ல முறையில் நடத்துவது, கட்சியை மேலும் பலப்படுத்துவது, கட்சி தொண்டர்களின் கருத்துகளை சேகரிப்பது, மக்களிடம் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்வது போன்றவை குறித்து ஆலோசனை நடைபெற்று உள்ளது. முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றுவது குறித்து ஆலோசனை நடக்கவில்லை. வளர்ச்சி பணிகள், ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது. மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம். மந்திரிகள் சி.பி.யோகேஷ்வர், ஈசுவரப்பா ஆகியோரின் கருத்துகள் குறித்து நான் எதுவும் கூற மாட்டேன். அதுபற்றி அவர்களிடமே நீங்கள் கேளுங்கள்.

அடுத்த சட்டமன்ற தேர்தலில் கட்சி சார்பில் நாங்கள் வாக்கு சேகரிப்போம். எங்கள் கட்சி பலம் வாய்ந்தது. எங்கள் கட்சி பயணிக்கும் திசை குறித்து கட்சி மேலிடமே முடிவு செய்யும். கட்சியில் குழப்பங்கள் இருந்தால் அதை கட்சி மேலிடம் சரிசெய்யும். இந்த விஷயத்தில் அதிக விளக்கம் தேவை என்றால் நீங்கள் எங்கள் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரிடம் கேளுங்கள்.

முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் ஆட்சி நிர்வாகம் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. அவரது மந்திரிசபையில் நானும் உள்ளேன். மந்திரிசபை புனரமைப்பு குறித்து நான் ஏதாவது கருத்து கூறினால் அதனால் குழப்பம் ஏற்படும். அதனால் அதுபற்றி பேச விரும்பவில்லை. ராமநகர் மாவட்ட பொறுப்பு மந்திரியாக நான் இருக்கிறேன். நாளை வேறு யாராவது நியமிக்கப்படலாம்.

பதவிக்கு போட்டி இருக்க வேண்டும், ஆசை இருக்க வேண்டும். ராமநகர் மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருப்பதால் நான் அடிக்கடி ராமநகருக்கு வருகிறேன். அடுத்த சட்டமன்ற தேர்தலில் மாகடி தொகுதியில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. நான் ராமநகர் மாவட்ட வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறேன். மல்லேஸ்வரம் தொகுதியில் நான் பாதுகாப்பாக உள்ளேன். தொகுதி மாறும் எண்ணம் எனக்கு இல்லை.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.
Tags:    

Similar News