ஆன்மிகம்
தெப்பத்திருவிழா முட்டுத்தள்ளும் நிகழ்ச்சியில் திரண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்ப திருவிழா நாளை நடக்கிறது

Published On 2021-01-27 06:35 GMT   |   Update On 2021-01-27 06:35 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்ப திருவிழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று நடந்த தெப்பம் முட்டுத்தள்ளும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சாமி, அம்மனை தரிசனம் செய்தனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது சிறப்பு. அதில் முக்கிய திருவிழாவாக சித்திரை திருவிழா, ஆடி முளைக்கொட்டு, ஆவணி மூலஉற்சவம், ஐப்பசி திருவிழா, தை தெப்ப திருவிழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்தாண்டுக்கான தை மாத தெப்பத்திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பல்வேறு பகுதியில் உள்ள மண்டபங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கி்ன்றனர். 8-ம் நாள் விழாவில் வலைவீசி அருளிய லீலைக்காக டி.பி.மெயின் ரோட்டில் உள்ள மண்டபத்திலும். 9-ம் நாளான நேற்று முன்தினம் சப்தாவர்ண சப்பரத்தில் 4 சித்திரை வீதிகளிலும் வலம் வந்தனர்.

தெப்ப திருவிழாவுக்காக தெப்பம் கட்டும் பணி நிறைவடைந்தது. எனவே தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி அம்மனும், சாமியும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பாடாகி காமராஜர் சாலை வழியாக முக்தீஸ்வரர் கோவிலில் எழுந்தருளினர். அங்கிருந்து தெப்பக்குள்தை சென்றடைந்து, அங்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் 11-ம் நாளான இன்று (புதன்கிழமை) சிந்தாமணி கிராமத்தில் கதிரறுப்பு திருவிழா நடைபெற உள்ளது.

இதையொட்டி அம்மனும், சாமியும் தங்க பல்லக்கில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பட்டு, அம்மன் சன்னதி, கீழமாசி வீதி, காமராஜர் சாலை, கீழவெளிவீதி, சிந்தாமணி ரோடு வழியாக கதிரறுப்பு மண்டபத்தை சென்று அடைவர். அங்கு 9.35 மணிக்கு மேல் தெப்பம் தலை முகூர்த்தம் விழா நடைபெறும்.

விழாவில் முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழா நாளை (வியாழக்கிழமை) நடக்க உள்ளது. இதையொட்டி மீனாட்சி அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும், சுந்தரேசுவரர் வெள்ளி சிம்மாசனத்திலும் எழுந்தருளி நாளை காலை 5 மணிக்கு மேல் கோவிலில் இருந்து புறப்பட்டு, தெப்பக்குளம் சென்றடைவர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமியும், அம்மனும் எழுந்தருளி காலை 2 முறையும், இரவு ஒரு முறையும் தெப்பத்தில் தெப்பக்குளத்தை வலம் வருவர்.

மேலும் எந்தாண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு தெப்பக்குளத்தில் அதிகமான அளவு தண்ணீர் நிரம்பி அழகுற காட்சி அளிக்கிறது. மேலும் பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில் சாமியும், அம்மனும் தெப்பத்தில் வலம் வரும் காட்சி மிகவும் சிறப்பாக இருக்கும். எனவே தெப்பத்திருவிழாவை காண பக்தர்கள் ஆவலோடு உள்ளனர்.

ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News