செய்திகள்

பிரதமர் வீட்டு முன்பு சாகும் வரை உண்ணாவிரதம்- அய்யாக்கண்ணு பேட்டி

Published On 2018-03-03 12:09 GMT   |   Update On 2018-03-03 12:09 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் வீட்டு முன்பு சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம் என்று அய்யாக்கண்ணு கூறினார். #ayyakannu #pmmodi #cauveryissue

நெல்லை:

தமிழக விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் ஒன்றினைந்து தமிழகம் முழுவதும் 100 நாட்கள் சென்று அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.

இந்த போராட்ட பயணம் கடந்த 1-ந்தேதி குமரியில் தொடங்கியது. இந்நிலையில் இன்று அவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நூதன முறையில் மண்டை ஓட்டை மாலையாக அணிந்து மத்திய அரசே விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்று கோ‌ஷமிட்டவாறு வந்தனர்.

பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் காப்பாற்ற மறுக்கிறது. ஒகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிக நஷ்டஈடு கொடுக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை. தமிழக விவசாய நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக மரபணு மாற்றப்பட்ட விதைகளை வினியோகம் செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் இளைஞர்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும். பெண்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும்.

முன்பு கல் உப்பு சாப்பிட்ட பொழுது நோய் இல்லை. இப்போது அயோடின் உப்பை சேர்க்கும் போது பிரசர் வருகிறது. ஜெர்ஸி மாட்டு பால் மற்றும் பிராய்லர் கோழி இறைச்சியினால் 16 வயதில் வயதிற்கு வரும் பெண்கள் தற்போது 8 வயதில் வயதிற்கு வருகின்றனர். எனவே தமிழக சந்ததியினரை பாதுகாக்க இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளோம்.

இதற்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டி வருகின்றனர். நாங்கள் கட்சி சார்பில்லாமல் விவசாயிகளை பாதுகாக்க இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளோம். தமிழக முதல்-அமைச்சரும், எதிர் கட்சி தலைவரும் காவிரி மேலாண்மை விசயத்தில் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு அதற்கு நேரம் கொடுக்க மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் வீட்டு முன்பு சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews  #ayyakannu #pmmodi #cauveryissue

Tags:    

Similar News