கோவில்கள்
1008 லிங்கங்கங்களுடன் ஆத்தமலிங்கேஸ்வரர்.

1008 லிங்கங்களுடன் அமைந்த ஆத்தலிங்கேஸ்ரர் ஆலயம்

Published On 2022-01-23 05:38 GMT   |   Update On 2022-01-23 05:38 GMT
திண்டுக்கல் அருகே காம்பார்பட்டியில் பெருமாள், திருமால் மற்றும் 1008 லிங்க, ஆத்மலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா அதிகாரிபட்டி அருகே உள்ளது காம்பார்பட்டி. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு உருவானது ஆத்மலிங்கேஸ்வரர் உடனுறை மாதா புவனேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவிலுக்கு வந்தால் ஒரே இடத்தில் 1008 சிவலிங்கங்களை காணலாம்.

கோபால்பட்டி அருகே காம்பார்பட்டியில் இந்த அழகிய திருத்தலம் அமைந்துள்ளது. சிவபெருமான் மீது பற்று கொண்ட சிவத்தொண்டர் சச்சிதானந்த சாமிகள், பல யுகங்களுக்கு முன் சித்தர் ராமதேவர் எப்போதும் இங்கு வழிபாடு செய்ததாகவும், ஒரு பெரிய சிவன் கோவில் இந்த இடத்தின் அடியில் இருந்ததை இவர் ஞானப்பார்வையால் அறிந்ததாகவும் கூறுகிறார்.

தென்னாடுடைய சிவன் மேல்கொண்ட அன்பின் உச்சநிலை இக்கோயில். மக்களின் துயர் தீர்க்கும் ஒரு கோயிலாக இது அமையவேண்டும் என்ற இவரது விருப்பத்தால் 1998ல் ஆரம்பித்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் புவனேஸ்வரியம்மாள் உடனுறை ஆத்மலிங்கேஸ்வரர் ஆலயமாக முதல் கும்பாபிஷேகம் 2012, மே 6&ல் நடத்தப்பட்டது.

ஒரு நாள் இவர் உறங்கி கொண்டிருக்கும் வேளையில் லிங்கத்திலிருந்து தோன்றிய சிவன், 2016 சிவலிங்கங்களும் ஒரு சகஸ்ரலிங்கமும், 1007 லிங்கங்களும் கட்டி, பிரதிஷ்டை செய்யுமாறு கூறியதும், சிவபெருமான் லிங்கத்திற்குள் மறைந்து விட்டாராம். சிவபெருமானின் அருளால் இதற்கான நிலம் கிடைக்கப்பெற்றதும், வேலைகளை இவர் தொடங்கினார்.

இதுவரை மக்கள் 1008 சிவலிங்கங்களை தானமாக வழங்கி உள்ளனர். இங்குள்ள சிறப்பே ஒரே கோயிலில் 1008 சிவலிங்கங்கள், 80 டன் எடையில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 20 அடி நீளம் கொண்ட பிரமாண்ட பள்ளி கொண்டபெருமாள், மாவட்டத்திலேயே பெரிய நந்தீஸ்வரர், திருமாலின் மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராக அவதாரம், வாமன அவதாரம், நரசிம்மாவதாரம், பரசுராம அவதாரம், பலராம அவதாரம், ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகிய 9 அவதாரங்கள் இங்குள்ளது.

கொடிமரத்தில் நான்கு பக்கமும் பிரம்மா, சரஸ்வதி, லிங்கம், நந்தீஸ்வரர் என இடம் பெற்றிருப்பது கொடி மரத்தின் சிறப்பு. மேலும் இங்கு மாதா புவனேஸ்வரி அம்மன், ஆத்மலிங்கேஸ்வரர், பாலமுருகன், காசிலிங்கம், மகாலட்சுமி, சித்தி விநாயகர், நாகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, தன்வந்திரி, நவ கிரகங்கள், ஆஞ்சநேயர், நந்தீஸ்வரர் மற்றும் 1008 சிவலிங்கங்கள் என அனைத்து தெய்வங்களையும் வழிபடலாம்.

இவை தவிர காவல்தெய்வங்களான கருப்பசாமி, அய்யனாரும் உள்ளனர். அய்யப்பன், நடராஜர் சிலைகள் தயாராகி வருகிறது.

மகா சிவராத்திரி அன்று விடிய விடிய சிறப்பு பூஜைகள் 1008 லிங்கங்களுக்கும் நடைபெறும். ஒவ்வொரு பிரதோஷம், சஷ்டி, சங்கடஹர சதுர்த்தி, அமாவாசை பூஜைகளும் உண்டு. தேய்பிறை அஷ்டமியன்று காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறும். தினமும் காலை 6 மணிமுதல் 11 மணிவரையும், மாலை 4 மணிமுதல் 8.30 மணிவரையும் கோயில் திறந்திருக்கும். காலை 6 மணிமுதல் 8 மணிவரை பூஜை நடைபெறும்.

இயற்கை எழில் கொஞ்சும் காம்பார்பட்டியில் தெய்வீக மனம் கமலும் ஆலயமாக இந்த திருத்தலம் அமைந்துள்ளது. காக்கும் கடவுள், படைக்கும் கடவுள், அழிக்கும் கடவுள் மற்றும் பரிவார தெய்வங்கள், எல்லை தெய்வங்கள் ஆகியவற்றை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இங்கு நாமும் ஒரு முறை சென்று வணங்கினால் வேண்டிய வரங்களை பெற்று மன நிம்மதி அடையலாம்.
Tags:    

Similar News