ஆன்மிகம்
கபாலீஸ்வரர் கோவில்

கபாலீஸ்வரர் கோவிலில் நாளை அறுபத்து மூவர் உலா: மயிலாப்பூரில் பாதுகாப்பு அதிகரிப்பு

Published On 2021-03-25 09:21 GMT   |   Update On 2021-03-25 09:21 GMT
கபாலீஸ்வரர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை திருஞானசம்பந்த சாமிகள் எழுந்தருளலும், பூம்பாவை உயிர்பெற்று எழுகின்ற நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து 63 நாயன்மார்களோடு திருக்காட்சி திருவிழா நடக்கிறது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து தினமும் சாமி, அம்பாள், வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

அம்மை மயில் வடிவில் சிவபூஜை காட்சி, புன்னை மரம், கற்பக மரம், வேங்கை மர வாகனங்கள், வெள்ளி சந்திர வட்டம், கிளி, அன்ன வாகனங்கள், வெள்ளி பூரம், பூதகி தாரகாகரன் நாகம், காமதேனு, சிங்கம், புலி வாகனங்கள், வெள்ளி ரி‌ஷப வாகனங்கள் காட்சி ஆகியவை நடந்தன.

23-ம் தேதி ஐந்திருமேனிகள் யானை வாகன வீதி உலா நடந்தது. பங்குனி பெருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விழாவையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) காலை திருஞானசம்பந்த சாமிகள் எழுந்தருளலும், பூம்பாவை உயிர்பெற்று எழுகின்ற நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 2.45 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் 63 நாயன்மார்களோடு திருக்காட்சி திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி விநாயகர் முன்செல்ல, தொடர்ந்து பவளக்கால் சப்பரத்தில் நாயன்மார்களுடன் கபாலீசுவரர்- கற்பகாம்பாள், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமானும், சண்டிகேசவருடன் மாட வீதிகளில் வலம் வருகின்றனர்.

அவர்களுடன் திருவள்ளுவர்-வாசுகி, முண்டககண்ணி அம்மன், அங்காள பரமேஸ்வரி, திரவுபதி அம்மன், சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன், கோலவிழி அம்மன் என பலரும் சேர்ந்து கொண்டு வீதி உலா வருகின்றனர்.

28-ந் தேதி திருக்கூத்த பெருமான் திருக்காட்சி ஐந்திருமேனிகள் விழா, தீர்த்தவாரி, மாலையில் புன்னை மரத்தடியில் உமா தேவியார் மயிலுருவுடன் மாதேவதை வழிபாடு, திருக்கல்யாணம், கைலாய ஊர்தி, கொடியிறக்கம், சண்டேஸ்சுவரர் விழா நிறைவு நடக்கிறது.

29-ந் தேதி பந்தம் பறிவிழாவும், 30-ந்தேதி நிறைவு திரு முழுக்கும் நடைபெறுகிறது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேவைப்படும் நேரங்களில் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றப்படுகிறது. அதன்படி 25-ந்தேதி மற்றும் 26-ந்தேதி கோவில் சன்னதி தெரு, கிழக்கு மாட வீதி ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை.

தேரோட்டம், அறுபத்து மூவர் திருவிழா நடைபெறு வதை முன்னிட்டு மயிலாப்பூரில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News