செய்திகள்
கோப்புபடம்

கடன் வாங்கி தருவதாக ஏமாற்றிய டெல்லி மோசடி கும்பல் கைது - 4 பேர் சிக்கனர்

Published On 2021-07-19 11:02 GMT   |   Update On 2021-07-19 11:02 GMT
தமிழகம், கேரளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் டெல்லி மோசடி கும்பல் கைவரிசை காட்டியுள்ளனர். இவர்கள் போலீசில் சிக்காமல் இருக்க நூதன முறையை கையாண்டுள்ளனர்.

சென்னை:

சென்னை பள்ளிக் கரணையைச் சேர்ந்த கனகலட்சுமி என்ற பெண்ணிடம் லோன் வாங்கி தருவதாக கூறி ஆன்லைனில் ரூ.82 ஆயிரம் பணம் பறிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது மோசடி கும்பல் டெல்லியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று ஜனக்புரி பகுதியில் கால்சென்டர் நடத்தி வந்த அசோக் குமார், அவரது மனைவி காமாட்சி, உடந்தையாக இருந்த ராஜ்வேல், அபிஷேக்பால் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் பஜாஜ் பைனான்ஸ், வரலட்சுமி பைனான்ஸ், தமிழர் பைனான்ஸ் என்று பல பெயர்களில் பொதுமக்களை தொடர்பு கொண்டு லோன் வாங்கி தருவதாக கூறி ஆன்லைனில் பணம் பறித்துள்ளனர்.

தமிழகம், கேரளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இவர்கள் போலீசில் சிக்காமல் இருக்க நூதன முறையை கையாண்டுள்ளனர்.

நிரந்தர முகவரி இல்லாத தெருவோரத்தில் வசிப்பவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.20000 வரை பணம் கொடுத்து அவர்கள் பெயரில் சிம்கார்டுகளை வாங்கி உள்ளனர். வங்கி கணக்குகளையும் தொடங்கி உள்ளனர்.

ஆனால் வங்கி மோசடி பிரிவு போலீசார் சாதுரியமாக செயல்பட்டு மோசடி கும்பலை கைது செய்தனர்.

இவர்கள் ஜியோ டவர் அமைத்து தருவதாக கூறியும் மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறும்போது, அறிமுகம் இல்லாத நபர்கள் செல்போனில் பேசி வங்கி சேவை தொடர்பான தகவல்களை கேட்டால் எந்த சூழ்நிலையிலும் கொடுக்க கூடாது என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News