செய்திகள்
கருப்பு பூஞ்சை

கர்நாடகாவில் 1,784 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு

Published On 2021-06-06 08:14 GMT   |   Update On 2021-06-06 08:14 GMT
கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு வழங்கும் ஆட்டோடெரிசின்-பி ஊசி மருந்து 9,750 குப்பிகளை மத்திய அரசு கர்நாடகத்திற்கு ஒதுக்கி உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 1,784 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 62 பேர் குணம் அடைந்துள்ளனர். இந்த நோய்க்கு 111 பேர் இறந்துள்ளனர். 1,564 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நோயாளிகளுக்கு வழங்கும் ஊசிக்கான மருந்தை மத்திய அரசு வழங்கி உள்ளது. கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு வழங்கும் ஆட்டோடெரிசின்-பி ஊசி மருந்து 9,750 குப்பிகளை மத்திய அரசு கர்நாடகத்திற்கு ஒதுக்கி உள்ளது.

இதில் 8,860 குப்பி ஊசி மருந்துகள் கர்நாடகத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர், ஆயுஷ்மான்பாரத் ஆரோக்கிய கர்நாடக திட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இதனிடையே கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. ஜூன் மாதத்தில் மட்டும் 70-75 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் இதுவரை 1.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஜூன் மாத இறுதிக்குள் மாநிலத்தில் 2.25 கோடி பேர் ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பார்கள் என்று கர்நாடக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

Similar News