ஆன்மிகம்
தீபாவளி

உள்ளத்து இருளை அகற்றும் தீபத்திருநாள்

Published On 2019-10-27 05:07 GMT   |   Update On 2019-10-27 05:07 GMT
மக்கள் அனைவரின் உள்ளத்திலும் ஒப்பற்ற மகிழ்ச்சியைத் தரும் பண்டிகைகளில் ஒன்று ‘தீபாவளி.’ இந்த திருநாளைக் கொண்டாடுவதற்கு புராணங்களின் வாயிலாக பல்வேறு கதைகளும், காரண காரியங்களும் சொல்லப்படுகின்றன.

மக்கள் அனைவரின் உள்ளத்திலும் ஒப்பற்ற மகிழ்ச்சியைத் தரும் பண்டிகைகளில் ஒன்று ‘தீபாவளி.’ இந்த திருநாளைக் கொண்டாடுவதற்கு புராணங்களின் வாயிலாக பல்வேறு கதைகளும், காரண காரியங்களும் சொல்லப்படுகின்றன.

அதாவது மூவுலகங்களையும் துன்பத்தில் ஆழ்த்தி, இருளில் மூழ்கச் செய்த நரகாசுரனை, கிருஷ்ணன் வதம் செய்த நாள் தீபாவளி என்பது பெரும்பாலானவர்கள் சொல்லும் முதன்மையான காரணமாக இருக்கிறது.

அதே போல் 14 ஆண்டுகள் காட்டுக்குச் சென்ற ராமன், மீண்டும் அயோத்திக்குள் வந்தபோது, மக்கள் அனைவரும் தீபங்களை ஏற்றிவைத்து அவரை வரவேற்றனர். அந்த நாளே தீபாவளி என்போரும் இருக்கிறார்கள்.

அமிர்தம் கிடைப்பதற்காக அசுரர்களும், தேவர்களும் இணைந்து திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது அதற்குள் இருந்து நிறைய பொருட்களும், தெய்வீக அம்சம் பொருந்தியவர்களும் வெளிப்பட்டனர். அப்படி வெளிப்பட்டவர்களில் ஒருவர் லட்சுமிதேவி. அவரை மகாவிஷ்ணு திருமணம் செய்து கொண்டார். பாற்கடலில் இருந்து லட்சுமி வெளிப்பட்ட தினமும், அவரை விஷ்ணு திருமணம் செய்து கொண்ட தினமுமே தீபாவளியாக கொண்டாடப்படுவதாகவும் சொல்வார்கள்.

இரண்யகசிபு என்ற அசுரனுக்கு மகனாகப் பிறந்து, நாராயணரின் பெயரையே நாள் முழுவதும் தன் நாவில் உச்சரித்து வந்த பிரகலாதனின் பேரன்தான் மகாபலி சக்கரவர்த்தி. அவனிடம் இருந்து மூன்றடி மண் கேட்ட திருமாலின் அவதாரமான வாமனர், மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்தார். அப்படி தன் பாதங்களால் மகாபலிக்கு இறைவன் ஞானதிருவடி சூட்டிய நாளே ‘தீபாவளி’ என்போரும் உண்டு.

சிவபெருமான் எப்போதும் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்பதற்காக பார்வதிதேவி ஒரு விரதம் மேற்கொள்ள எண்ணினார். அதற்காக அவர் கவுதம முனிவரிடம் ஆலோசனை கேட்டார். கவுதம முனிவரும், ‘கேதார கவுரி விரதம்’ என்ற நோன்பை ஈசனை நோக்கி இருக்கும்படி கூறினார். அதன்படியே விரதம் இருந்த பார்வதி தேவிக்கு காட்சி கொடுத்த சிவபெருமான், தன்னுடைய உடலில் பாதி இடத்தை அவருக்கு அளித்தார். அந்த நாளே தீபாவளி என்பதும் சிலரது கூற்றாக இருக்கிறது.




இப்படி எத்தனை கதைகள் சொல்லப்பட்டாலும், அனைத்துக்கும் மையமாக ஒரே ஒற்றுமையாக திகழ்வது, தீபம் ஏற்றுவது. ஆம்.. தீபாவளி அன்று இல்லங்களில் தீபங்களை ஏற்றி இறைவனை வழிபட வேண்டும் என்ற ஒன்றைக் கருத்துதான் எல்லாவற்றுக்கும் பொதுவான ஒன்றாக இருக்கிறது.

அந்த வகையில் ரமண மகரிஷியின் வார்த்தைதான், தீபாவளியை நாம் கொண்டாடுவதற்கான உண்மையான காரணமாக இருக்க முடியும்.

அதாவது “தீய எண்ணங்கள்தான் நரக(ம்)ன். அவன் குடியிருக்கும் வீடு, நம்முடைய உடல். அந்த அசுரனை வெற்றிகொண்டு, நாம் அனைவரும் நம்முடைய உள்ளத்தில் ஆத்ம ஜோதியை ஏற்றுவதே தீபாவளித் திருநாள்” என்கிறார் ரமண மகரிஷி.

தீபம் + ஆவளி = தீபாவளி. ‘ஆவளி’ என்பதற்கு ‘வரிசை’ என்று பொருள். தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து இருளைப் போக்கி ஒளியை எங்கும் பரவச் செய்து, இறைவனை வழிபடுவதே தீபாவளியின் நோக்கம்.

தீபாவளி கொண்டாட்டத்துக்கான காரணமாக புராணம் சொல்லும் நரகாசுரன் கதையை கொஞ்சம் பார்க்கலாம்.

பூமியை களவாடி கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான், இரண்யாசுரன். திருமால் வராக அவதாரம் எடுத்து இரண்யா சுரனை அழித்து பூமியை மீட்டு வந்தார். அப்போது பூமாதேவிக்கும், வராகருக்கும் பிறந்தவன் நரகாசுரன் என்று புராணங்கள் சித்தரிக்கின்றன.

தன் மகன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவன் நலமுடன் வாழ வேண்டும் என்பதே தாய் என்பவளின் எண்ணமாக இருக்கும். பூமாதேவியும் அப்படித்தான். தன் மகனுக்காக திருமாலிடம் ஒரு வரம் கேட்டாள். “இறைவா! என் மகனுக்கு இறப்பில்லாத வரத்தை அருள வேண்டும்.”

“இல்லை தேவி. அப்படியொரு வரத்தை அளிக்க முடியாது. பிறந்தவர்கள் ஒரு நாள் இறந்துதான் ஆக வேண்டும். அது உலக நியதி. வேண்டுமானால் ஒரு வரம் தருகிறேன். உன் மகனுக்கு என்னால் அன்றி வேறு எவராலும் இறப்பு நிகழாது. அப்போது நீயும் என்னுடன் இருப்பாய்” என்றார், மகாவிஷ்ணு.

இந்த நிலையில் கடும் தவம் புரிந்த நரகாசுரன், பிரம்மதேவரிடம் இறப்பில்லாத வரத்தை கேட்டான். அது சாத்தியமில்லை என்று கூறிய பிரம்மன், வேறு ஏதாவது வரம் கேட்கும்படி கூறினார்.

சற்றே யோசனை செய்த நரகாசுரன், “எனக்கு என் தாயைத் தவிர வேறு யாராலும் இறப்பு நிகழக்கூடாது” என்று வரம் கேட்டான். தாய் என்பவள் எந்த நிலையிலும், தன் மகனை கொல்லத் துணியமாட்டாள் என்பது நரகாசுரனின் எண்ணம். ஆனால் விதி வலியது ஆயிற்றே.

திருமால், கிருஷ்ண அவதாரம் எடுத்தபோது, பூமாதேவி சத்யபாமாவாக தோன்றினார். இதற்கிடையில் மூவுலகங்களையும் தன்னுடைய அசுர பலத்தால் அடக்கி வைத்திருந்த நரகாசுரன், நான்கு கோட்டைகளை எழுப்பி அதற்கு அப்பால் போய் அமர்ந்து ஆட்சி புரிந்து வந்தான்.

தேவர்களும், உலக மக்களும் தங்களை நரகாசுரனின் பிடியில் இருந்து காப்பாற்றும்படி வேண்டியதால், கண்ண பிரான், தன் மனைவி சத்யபாமாவுடன் தேரில் ஏறி நரகாசுரன் ஆட்சிபுரியும் இடத்திற்குச் சென்றார். அவனது நான்கு கோட்டைகளையும் தகர்த் தெறிந்து உள் நுழைந்தார்.

நரகாசுரனுக்கும், கண்ணனுக்கும் போர் மூண்டது. அசுரப் படைகள் அனைத்தையும் அழித்த கண்ணன், நரகாசுரன் விடுத்த ஒரு அம்பில் மயங்கி விழுந்தது போல் நடித்தார். தன் கணவனையே கொல்லத் துணிந்த நரகாசுரனை சத்யபாமா வரிசையாக அம்புகளை எய்து கொன்றாள்.

பின்னர் இதுவரை உலக மக்கள் அனுபவித்த துன்பங்களே போதுமானது, தன் மகன் இறந்த நாளில் யாரும் துன்பத்தை அடையக்கூடாது. எனவே அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி, இருள் நீக்கி ஒளியைப் பரவச் செய்து இறைவனை வழிபட்டு அனைத்து செல்வங்களையும் பெற வேண்டும் என்று கண்ணனிடம், சத்யபாமா வரம் கோரினார். அதன்படியே தீபாவளி அன்று ஒளி தீபம் ஏற்றி பண்டிகையாக கொண்டாடும் வழக்கம் வந்ததாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News