செய்திகள்
கோப்பு படம்

காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும் இன்டர்நெட் சேவை - 2 ஜி வேகத்திற்கு மட்டுமே அனுமதி

Published On 2020-07-29 16:12 GMT   |   Update On 2020-07-29 16:12 GMT
காஷ்மீரின் அனைத்து பகுதிகளுக்கும் இன்டர்நெட் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் இணையதள வேகம் 2 ஜி அளவிலேயே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர்:

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நீக்கப்பட்டது. மேலும், அப்பகுதி ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் விதமாக தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டது. சமூகவலைதள பக்கங்கள் தடை செய்யப்பட்டன. செல்போன், தொலைபேசி, சேவைகள் நிறுத்தப்பட்டன. இணைய தள சேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டன. 

பின்னர் நிலைமை சீரடைந்ததை தொடர்ந்து செல்போன் சேவைகள், எஸ்.எம்.எஸ். சேவைகள் சமூகவலைதளங்கள் மீண்டும் இணைக்கப்பட்டன. ஆனால் இணைய தள சேவைகள் மிகக்குறைவான வேகத்தில் இயங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

குறிப்பாக இன்டர்நெட் சேவையின் வேகம் 2 ஜி அளவிலேயே இருந்து வருகிறது. இந்த சேவை வேகத்தை 4 ஜி அளவில் உயர்த்த கோரிக்கைகள் எழுந்துவந்தன.   

இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. காஷ்மீருக்கு அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்குவது தொடர்பாக காஷ்மீர் யூனியன்பிரதேச அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. 

இதற்கிடையில், 4ஜி வேகத்தில் இணைய தள சேவையை வழங்கினால் அது காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவர்களுக்கு உதவலாம் என்ற எண்ணத்தோடு 4 ஜி சேவை தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும் இன்டர்நெட் சேவை தடையின்றி வழங்கப்பட்டு வருவதாக ஜம்மு-காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது. மேலும், இணைய தளத்தின் வேகம் தொடர்ந்து 2ஜி என்ற அளவிலேயே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போஸ்ட் பேய்ட் சிம் சந்தாதாரர்களுக்கும் மட்டுமே இணைய தள சேவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அடுத்த வாரம் புதன்கிழமையுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News