செய்திகள்
கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார்

எனக்கு நீதிமன்றங்கள் அறிவுரை வழங்க முடியாது- உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக சபாநாயகர் வழக்கு

Published On 2019-07-11 10:12 GMT   |   Update On 2019-07-11 10:12 GMT
அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்பது பற்றி இன்றே முடிவெடுக்கும்படி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதை எதிர்த்து கர்நாடக சபாநாயகர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
புதுடெல்லி:

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால் முதல்வர் குமாரசாமிக்கு சட்டசபையில் மெஜாரிட்டி பலம் இல்லாத நிலை உருவாகி இருக்கிறது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்வதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே, சிவக்குமார், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள் தேவேகவுடா, குமாரசாமி, சிவராமலிங்க கவுடா ஆகியோர் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அவர்களது முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

குமாரசாமிக்கு உதவும் வகையில் சபாநாயகர் ரமேஷ்குமார் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை இதுவரை ஏற்கவில்லை. ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள எம்.எல்.ஏ.க்கள் வருகிற 17-ந்தேதிக்குள் நேரில் வந்து தன் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து 10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களும் இன்று மாலை 6 மணிக்குள் பெங்களூரில் சபாநாயகர் முன்பு ஆஜராகி ராஜினாமா பற்றி சபாநாயகரிடம் தெரிவிக்கலாம் என்றும், இது தொடர்பாக சபாநாயகர் இன்றே முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என்றும் கூறினர்.

10 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் முடிவு குறித்து சபாநாயகரிடம் தெரிவித்த பிறகு, அதில் சபாநாயகர் என்ன முடிவு எடுத்துள்ளார் என்பது பற்றி கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள், வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.



இதையடுத்து சபாநாயகர் ரமேஷ் குமார், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலம் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், ‘அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்பது பற்றி இன்றே முடுவெடுக்கும்படி பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும். எம்எல்ஏக்களின் ராஜினாமா பற்றி முடிவெடுக்கும்படி எனக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்த முடியாது. சபாநாயகருக்கு எந்த அறிவுரையும் நீதிமன்றங்கள் வழங்க முடியாது’ என கூறியுள்ளார்.

இந்த வழக்கை இன்றே அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று அவரது சபாநாயகரின் வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். ஆனால் அந்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். ஏற்கனவே இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டதால் சபாநாயகரின் மனுவை நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News