செய்திகள்
ஓமந்தூரார் அரசு மருத்துவமனை

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் முதல் சிறப்பு மருத்துவமனை

Published On 2020-03-25 05:26 GMT   |   Update On 2020-03-25 05:26 GMT
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனை வெள்ளிக்கிழமை முதல் செயல்பட தொடங்குகிறது.
சென்னை:

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சென்னையில் அதற்காக பிரத்யேக மருத்துவமனையை தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதையடுத்து அந்த சிறப்பு மருத்துவமனையை சென்னையில் எங்கு அமைக்கலாம் என்று கடந்த சில தினங்களாக ஆலோசனை நடைபெற்று வந்தது.

சென்னை அண்ணாசாலையில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகம் உள்ளது. அங்கு கொரோனாவுக்காக தனி ஆஸ்பத்திரி பிரிவு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த மருத்துவமனையில் முழுக்க முழுக்க கொரோனா நோயாளிகள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அதற்கேற்ப அந்த சிறப்பு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் இந்த சிறப்பு பிரத்யேக கொரோனா மருத்துவமனை செயல்பட தொடங்கும். அன்று முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு அனுமதிக்கப்படுவார்கள்.

அந்த சிறப்பு மருத்துவமனையில் 40 வெண்டிலெட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 178 டாக்டர்கள், 192 நர்சுகள், 80 மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள், 150 சுகாதார மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் அந்த மருத்துவமனையில் பணிபுரிவார்கள்.

அந்த சிறப்பு பிரத்யேக மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட 220 படுக்கை வசதிகள் செய்யப்படுகிறது. 130 தீவிர கண்காணிப்பு படுக்கை வசதிகள் செய்யப்படுகிறது. 24 மணி நேரமும் செயல்படும் பரிசோதனை கூடமும் அங்கு இருக்கும்.

இவை தவிர ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்துக்கான ஊழியர்கள் 24 மணி நேரமும் அந்த மருத்துவமனையில் தயார் நிலையில் இருப்பார்கள் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.



அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் கூறுகையில், “கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்ள மேலும் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. உடல்நலத்தால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் 2 மாதங்களுக்கு தேவையான மருந்துகளை வாங்கி இருப்பு வைக்கலாம்.

உயிர் காக்கும் மருந்து வாங்க முடியாதவர்கள் உதவிக்காக மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம். கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஆளில்லா சிறிய ரக பறக்கும் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினிகள் தெளிக்கப்படும்” என்றார்.
Tags:    

Similar News