செய்திகள்
குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயலட்சுமியை படத்தில் காணலாம்.

குளித்தலை அருகே பழையூரில் மூதாட்டியை கட்டையால் தாக்கி தங்கச்சங்கிலி பறிப்பு

Published On 2021-02-04 17:35 GMT   |   Update On 2021-02-04 17:35 GMT
குளித்தலை அருகேயுள்ள பழையூரில் மூதாட்டியை கட்டையால் தாக்கி தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குளித்தலை:

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள வதியம் ஊராட்சிக்குட்பட்ட பழையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் ஜெயராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 65). இவர் நேற்று காலை இயற்கை உபாதைகள் கழிப்பதற்காக தனது வீட்டின் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியில் தலையில் துணியைப் போர்த்தியபடி சேலை அணிந்திருந்த மர்ம நபர் ஒருவர் உட்கார்ந்து இருந்துள்ளார். விஜயலட்சுமி அந்த மர்ம நபரை கடந்து சென்றபோது, அவருக்கு பின்னால் சென்ற அந்த மர்ம நபர் விஜயலட்சுமியின் தலையில் பாவாடையை போர்த்தி அவரது தலையில் கட்டை போன்ற பொருளை கொண்டு தாக்கி, அவர் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்த தைல காட்டிற்குள் சென்று தப்பிவிட்டார். இதையடுத்து ரத்தக்காயத்துடன் தனது வீட்டின் அருகே சத்தம்போட்டு கொண்டே விஜயலட்சுமி வந்தார். இவரது அலறல் சத்தம் கேட்கவே அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடி வந்துள்ளனர்.

பின்னர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த விஜயலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விஜயலட்சுமியை தாக்கிவிட்டு தப்பியோடிய மர்ம நபரை தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியை தாக்கி தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News