ஆன்மிகம்
ஆத்மநாதேஸ்வரர் திருக்கோவில்

ஆத்மநாதேஸ்வரர் திருக்கோவில் - திருவாலம்பொழில்

Published On 2021-04-03 08:11 GMT   |   Update On 2021-04-03 08:11 GMT
திருகண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில், திருஆலம்பொழில் என்ற இடத்தில் ஆத்மநாதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
சிவஸ்தலம் பெயர் - திருவாலம்பொழில்
இறைவன் பெயர் - ஆத்மநாதேஸ்வரர், வடமூலேஸ்வரர்
இறைவி பெயர் - ஞானாம்பிகை
பதிகம் - திருநாவுக்கரசர் - 1

இவ்வாலயம் ஒரு 5 நிலை கோபுரத்துடன் விளங்குகிறது. மேற்கு நோக்கிய சந்நிதி. கோபுர வாயில் இருபுறமும் துவார பாலகர் உள்ளனர். கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் இடதுபுறம் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், விசுவநாதர், விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன. அடுத்துள்ள மண்டபத்தில் வலதுபுறம் நவக்கிரக சந்நிதியும், இடதுபுறம் அம்பாள் சந்நிதியும் உள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். இத்தலத்து அம்மனை வழிபட்டால் ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம். நேரே கருவறையில் இத்தலத்தின் மூலவர் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கருவறைச் சுற்றில் சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், நால்வர் சன்னதி, மூல விநாயகர், பஞ்சலிங்கம், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், காசி விஸ்வநாதர், வள்ளி, தெய்வானையுடன் முருகர், நவக்கிரகம், காசி விசாலாட்சி, நடராஜர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. இத்தல இறைவனை காசிபர், அஷ்டவசுக்கள் ஆகியேர் பூஜித்துள்ளனர். இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் மேதா தட்சிணாமூர்த்தியாக உள்ளார்.

திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அப்பர் இத்தலத்திற்கான தம் பதிகத்தில் தென் பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார். இதிலிருந்து ஊரின் பெயர் பரம்பைக்குடி என்றும், கோவிலின் பெயர் திருவாலம் பொழில் என்றும் அந்நாளில் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது. இத்தலக் கல்வெட்டிலும் இறைவன் பெயர் "தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

எப்படிப் போவது     

திருக்கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் திருப்பூந்துருத்திக்கு அடுத்து திருஆலம்பொழில் தலம் இருக்கிறது. கண்டியூரில் இருந்து சுமார் 5 கி.மி. தொலைவில் உள்ளது. கண்டியூரிலிருந்து நகரப் பேருந்து செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. திருவையாற்றிலிருந்து பூதலூர் வழியாகத் திருச்சி செல்லும் பேருந்தில் வந்தால் இத்தலத்திலேயே இறங்கலாம்.

ஆலய முகவரி    

அருள்மிகு ஆத்மநாதேசுவரர் திருக்கோயில்
திருவாலம் பொழில்
திருவாலம் பொழில் அஞ்சல்
திருப்பந்துருத்தி - S.O.
(வழி) திருக்கண்டியூர்
திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 613 103
Tags:    

Similar News