செய்திகள்
மழை

கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை

Published On 2021-10-05 03:59 GMT   |   Update On 2021-10-05 03:59 GMT
கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக காலை நேரங்களில் வெயிலும் இரவு நேரங்களில் மழையும் பெய்து வந்தது.
கடலூர்:

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக காலை நேரங்களில் வெயிலும் இரவு நேரங்களில் மழையும் பெய்து வந்தது.

நேற்றிரவு கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. அதனை தொடர்ந்து விடிய விடிய பலத்த மழை பெய்தது.

கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குட்டை போல் தேங்கி நின்றது.

தொடர் மழையால் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News