ஆன்மிகம்
மகளை அர்ப்பணித்த யெப்தா

மகளை அர்ப்பணித்த யெப்தா

Published On 2021-01-22 08:34 GMT   |   Update On 2021-01-22 08:34 GMT
கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொள்வது மிகச் சிறந்த வாழ்வு என அவள் நிரூபித்ததை இஸ்ரவேல் மக்களும் பின்பற்றத் தொடங்கினர். இவர்களை போல நாமும் இறை வாழ்க்கை வாழ முயல்வோம்.
கானான் நாட்டின் இன்னொரு பெயரே ‘இஸ்ரவேல்.’ அதன் முதல் நியாயாதிபதியாக யோசுவா இருந்தார். அதன்பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு வெவ்வேறு நியாயாதிபதிகள் இஸ்ரவேலை ஆட்சி செய்தனர். ஆனால் இஸ்ரவேலர்கள் மீது, தொடர் படையெடுப்புகள் மூலம் அந்நியர்கள் பலரும் ஆதிக்கம் செலுத்திவந்தனர். இப்படி அம்மோன் நாட்டின் மக்களாகிய அம்மோனியர்கள், இஸ்ரவேலர்கள் மீது 18 ஆண்டு காலம் ஆதிக்கம் செலுத்தி வந் தனர். இரக்கமற்ற கொலைகள், கொள்ளையில் ஈடுபட்டுவந்தனர். அவர்களது அட்டூழியங்களுக்கு முடிவுகட்ட எண்ணிய இஸ்ரவேலர்கள் தங்கள் கடவுளாகிய பரலோகத் தந்தையிடம் கெஞ்சி மன்றாடினார்கள்.

அம்மோனியருடன் போர் செய்ய யெப்தாவைத் தேர்ந்தெடுக்கும்படி கடவுள் வழிகாட்டினார். உறவுகளாலும், ஊர்க்காரர்களாலும் ஊரைவிட்டு வெளியேற்றப்பட்ட யெப்தாவை, இஸ்ரவேலர்கள் கெஞ்சி அழைத்தனர். அதை ஏற்றுக்கொண்டார் யெப்தா.

“யாரால் புறக்கணிக்கப்பட்டோமோ அவர்களே வந்து நம்மைத் தலைவராக ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறார்களே இது எத்தனை பெரிய தலைகீழ் மாற்றம். கடவுளாகிய யகோவா என் மீது காட்டிய கருணையன்றி இது வேறென்ன!” என்று கடவுளைப் புகழ்ந்த யெப்தா, போரில் வெற்றி பெற கடவுளின் உதவி தேவை என்பதை உணந்தார். கடவுளிடம் பிரார்த்தனை செய்வதற்காக ‘மிஸ்பா’வுக்குச் சென்றார். அங்கே போய் முழந்தாளிட்டுக் கடவுளை நோக்கி, “நீர் எனக்கு வெற்றியைத் தந்தால் போர் முடிந்து நான் வீடு திரும்பும்போது, என் வீட்டிலிருந்து என்னை எதிர்கொண்டு வரவேற்க முதல் நபராக யார் வருகிறார்களோ... அவர்களை உமக்கு அர்ப்பணிப்பேன்” என்று சத்திய நேர்த்திக் கடன் செய்து பிரார்த்தனை செய்தார்.

யெப்தா செய்த சத்திய நேர்த்திக் கடனை கடவுள் கேட்டார். அம்மோனியர்களுடனான போரில் யெப்தாவுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கிறது. அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த 20 நகரங்களை யெப்தா மீட்டெடுத்தார். வெற்றிக் களிப்புடன் இஸ்ரவேலர்களுக்குத் தலைமையேற்பதற்காக ஊர் திரும்பினார். ஊருக்குள் நுழைந்ததும் அவரை வரவேற்க எதிர்கொண்டு வந்தவர்களில் முதலில் வந்தாள், அவருடைய ஒரே அன்பு மகள். யெப்தா அவளை மிகவும் நேசித்தார். மிகுந்த மனவேதனை கொண்டவராய், தனது ஆடையைக் கிழித்துக் கதறியழுதார். தனது தந்தையின் சத்திய நேர்த்தியைப் பற்றித் தெரிந்து கொண்டபோது முதலில் வருத்தப்பட்டாலும் பின்னர் அவள் வருந்தவில்லை. தந்தையையும், தோழிகளையும் பிரிய வேண்டியிருக்குமே என்று அவள் நினைத்தாலும் சீலோவிலிருக்கிற ஆசாரிப்புக் கூடாரத்தில் கடவுளுக்கு வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய முடியும் என்பதை நினைத்தபோது அவள் மனம் நிறைந்தது. பின்னர் தனது தந்தையை சமாதானப்படுத்தி, இறைச்சேவைக்காக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டாள்.

பின்னர் கடவுளுக்குச் சத்தியம் செய்தபடியே யெப்தாவின் மகள் சீலோவுக்குப் போகிறாள். அங்கே யகோவாவின் ஆசாரிப்புக் கூடாரத்தில் தன் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்குச் சேவை செய்கிறாள். தந்தை மற்றும் தோழிகளின் உறவை முற்றிலும் மறந்தவளாய், இறைச்சேவை செய்தபடியே இறை வாழ்க்கை வாழ்கிறாள். கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொள்வது மிகச் சிறந்த வாழ்வு என அவள் நிரூபித்ததை இஸ்ரவேல் மக்களும் பின்பற்றத் தொடங்கினர். கடவுளுக்காக தங்களை அர்ப்பணித்து, இறை வாழ்வு வாழ்ந்தனர். இவர்களை போல நாமும் இறை வாழ்க்கை வாழ முயல்வோம்.
Tags:    

Similar News