செய்திகள்
சட்டமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் தென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடி

8 சட்டமன்ற தொகுதிகளில் 137 வேட்பாளர்கள் போட்டி : 3,343 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு

Published On 2021-04-05 22:27 GMT   |   Update On 2021-04-05 22:27 GMT
திருப்பூர் மாவட்டத்தில் 11 லட்சத்து 66 ஆயிரத்து 417 ஆண் வாக்காளர்கள், 11 லட்சத்து 93 ஆயிரத்து 104, மூன்றாம் பாலினத்தவர் 283 என மொத்தம் 23 லட்சத்து 59 ஆயிரத்து 804 வாக்காளர்கள் உள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 552 பதற்றமான வாக்குச்சாவடிகள் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம், காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம், அவினாசி, பல்லடம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 11 லட்சத்து 66 ஆயிரத்து 417 ஆண் வாக்காளர்கள், 11 லட்சத்து 93 ஆயிரத்து 104, மூன்றாம் பாலினத்தவர் 283 என மொத்தம் 23 லட்சத்து 59 ஆயிரத்து 804 வாக்காளர்கள் உள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 1,050 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற விகிதத்தில் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அதன்படி மாவட்டத்தில் 3 ஆயித்து 343 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் 297 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 549 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 3 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன.



இந்த வாக்குச்சாவடிகளில் தலைமை வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் 1, 2, 3 மற்றும் 4 என மொத்தம் 16 ஆயிரத்து 44 பேர் பணியாற்றுகிறார்கள். தாராபுரம் தொகுதியில் 14 வேட்பாளர்கள், காங்கேயத்தில் 26, அவினாசியில் 12, திருப்பூர் வடக்கு தொகுதியில் 15, திருப்பூர் தெற்கு தொகுதியில் 20, பல்லடத்தில் 20, உடுமலையில் 15, மடத்துக்குளத்தில் 15 என மொத்தம் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். திருப்பூர் தெற்கு, பல்லடம், காங்கேயம் தொகுதியில் வேட்பாளர்கள் அதிகம் உள்ளதால் 2 பேலட் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 5.30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. அதன்பிறகு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க வசதியாக மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 1,087 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர், துணை ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பதற்றமான வாக்குச்சாடிகளில் வெப்கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. அங்கு நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 5 பொது பார்வையாளர்கள், 4 செலவின பார்வையாளர்கள், ஒரு காவல்துறை பார்வையாளர் ஆகியோர் மேற்பார்வை செய்கிறார்கள். மாவட்டத்தில் 50 சதவீத வாக்குச்சாவடிகள் வெப்கேமரா கண்காணிப்புக்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும்.

வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்து சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் உள்ள கட்டிடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன. வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்தியேன் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News