செய்திகள்
தீபாவளி பட்டாசுகள்

விவசாய பணிகளுக்காக கடந்த 66 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாத 12 கிராம மக்கள்

Published On 2020-09-25 09:57 GMT   |   Update On 2020-09-25 09:57 GMT
விவசாய பணிகளுக்காக சிங்கம்புணரி அருகே கடந்த 66 ஆண்டுகளாக 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் இன்று வரை கடைபிடித்து வருகின்றனர்.
சிங்கம்புணரி:

ஆண்டுதோறும் வரும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு சத்தம் காதை கிழிக்கும் வகையிலும், அன்றைய தினம் புத்தாடை அணிந்து, வீடுகளில் விருந்து உபசாரம் நடைபெற்றும், தலை தீபாவளி பண்டிகையை கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு விஷேச கவனிப்பும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

இந்தநிலையில் ஒரு பக்கம் கொரோனா தொற்று மக்களை தாக்கி வரும் வேளையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடலாமா அல்லது புறக்கணிக்கலாமா என்று மக்கள் நினைத்து வரும் வேளையில் கடந்த 66 ஆண்டுகளாக சிங்கம்புணரி அருகே உள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் தவிர்த்து வருகின்றனர்.

இந்த பருவ மழை காலத்தின் போது தமிழகம் முழுவதும் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெறுவது வழக்கம். இந்த நேரத்தில் தான் இந்த தீபாவளி பண்டிகை வருவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை இந்த கிராம மக்கள் தவிர்த்து இன்று வரை கடைபிடித்து வருகின்றனர். இதுகுறித்து இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரிய அம்பலக்காரர் சபா ராசராசன் என்பவர் கூறியதாவது:-

கடந்த 1953-ம் ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டது. இங்குள்ள எஸ்.மாம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய பணி முடங்கியது.

ஆனாலும் இந்த கிராமங்களில் வாழ்ந்த மக்கள் தங்களது விவசாய பணியை துறக்க முடியாமல் இருந்த நிலையில் அப்போது இங்கு வசித்த பணம் படைத்தவர்களிடம் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை கடனாகப் பெற்று விவசாயத்தை மேற்கொண்டனர். அந்த காலகட்டத்தில் தீபாவளி பண்டிகை வந்தது. ஏற்கனவே கடும் வறட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையிலும், மற்றொரு புறம் கடன் வாங்கி விவசாயத்தை மேற்கொண்ட வகையில் அப்போது வசித்த கிராம மக்களுக்கு கையில் பணம் இல்லாமல் இருந்தனர்.

இதுகுறித்து அப்போது இந்த கிராமத்தில் வசித்த பெரிய அம்பலக்காரரான பெரி சேவுகன் என்பவரது தலைமையில் கிராம மக்கள் ஊர் கூட்டம் கூடி தற்போது மிகவும் கஷ்டமான காலத்தில் இருப்பதால் தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் தவிர்த்து இனி வரும் காலங்களிலும் நமது சந்ததியினரை இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட அனுமதிக்கக்கூடாது என முடிவு செய்தனர். இதற்கு பதிலாக விவசாயம் அறுவடை காலமாக தை பொங்கல் தினத்தை தொடர்ந்து 3 நாட்கள் கோலாகலமாக கொண்டாடுவது என முடிவு செய்தனர்.

அப்போது அந்த கிராம மக்கள் எடுத்த முடிவை சுமார் 66 வருடங்களுக்கு பின்னர் இன்று வரை இந்த 12 கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் கடைபிடித்து வருகிறோம். இதுதவிர இந்த கிராமங்களில் இருந்து பெண் கொடுத்தாலோ அல்லது மற்ற ஊர்களில் இருந்து பெண் எடுத்தாலோ அவர்கள் கூட இன்று வரை தலை தீபாவளியை கொண்டாடாமல் தவிர்த்து வருகின்றனர். தற்போதைய தலைமுறையினரும் இதை கடைபிடித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News