செய்திகள்
ஒயின்

டாஸ்மாக் கடைகளில் புதிய ரக ஒயின் அறிமுகம்

Published On 2020-02-08 05:16 GMT   |   Update On 2020-02-08 05:16 GMT
மது பிரியர்களை திருப்திபடுத்த டாஸ்மாக் கடைகளில் புதிய வகை ஒயின் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எலைட் ரக மதுபான கடைகளிலும் முக்கிய டாஸ்மாக் கடைகளிலும் இந்த ஒயின் விற்பனைக்கு வருகிறது.
சென்னை:

தமிழகத்தில் 2003-ம் ஆண்டு முதல் டாஸ்மாக் மூலம் மது விற்பனை தொடங்கப்பட்டது.

டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க செய்யும் வகையில், டாஸ்மாக் நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



கடந்த காலங்களில் ஆண்டுக்கு ஒரு முறை புதிய சரக்குகளை அறிமுகம் செய்த டாஸ்மாக் நிர்வாகம், மாதந்தோறும் புதிய சரக்குகளை அறிமுகம் செய்வதுடன், தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போதும், புதுப்புது ரக சரக்குகளை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது ஒயின் பிரியர்களை திருப்திபடுத்தும் வகையில் புதிய வகை ஒயின் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

‘சூலா’ எனப்படும் இந்த வகை ஒயின் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் உயர் ரக ஒயின் ஆகும். நாசிக்கில் அமைந்த திராட்சைத் தோட்டத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவகை ஒயுனை சூலா என்று அழைக்கிறார்கள். இந்த வகை ஒயின் தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் மிகவும் பிரபலம்.

உயர்ரக மது வகைகள் விற்கப்படும் எலைட் ரக மதுபான கடைகளிலும் முக்கிய டாஸ்மாக் கடைகளிலும் இந்த ஒயின் விற்பனைக்கு வருகிறது.

சூலா வகை ஒயின் தயாரிப்பாளரான சூலா வினயார்ட்ஸ் நிறுவனத்தின் அதிகாரி இதுகுறித்து கூறியதாவது:-

இந்தியாவிலேயே மது நுகர்வோர்கள் அதிகம் இருக்கும் தமிழ்நாட்டில் எங்கள் வகை ஒயினை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. சூலா ஒயின் 6 வகைகளில் தற்போது கிடைக்கும். ஓரிரு மாதங்களில் இன்னும் 2 வகைகளை அறிமுகப்படுத்த உள்ளோம். குறைந்தப்பட்சம் ஆயிரம் ரூபாயாக இருக்கும். சென்னையில்தான் ஒயின் அதிகம் அருந்தப்படுகிறது. அடுத்து கோவையில் நுகர்வு அதிகமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News