ஆன்மிகம்
திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவில்

திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த பக்தர்கள் கோரிக்கை

Published On 2020-10-05 07:53 GMT   |   Update On 2020-10-05 07:53 GMT
திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் புராதனவனேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்று நூறு ஆண்டுகளை கடந்த நிலையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2001- ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடந்தது. அதன் பிறகு இன்னும் குடமுழுக்கு செய்யப்படவில்லை.

திருவிழாக்கள் மற்றும் மாதந்தோறும் நடைபெறும் பிரதோஷ வழிபாடு, சித்திரை தமிழ் வருட பிறப்பு, வைகாசி விசாக பெருந்திருவிழா மாசிமகம் ஆகியவை இக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள் ஆகும். இதில் திருச்சிற்றம்பலம் பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது இஷ்ட தெய்வமான பெரிய நாயகி அம்மனையும் புராதன வனேஸ்வரரையும் வழிபாடு செய்து வருகின்றனர். இவைதவிர வருடந்தோறும் எண்ணற்ற திருமணங்கள் இந்த கோவிலில் நடந்து வருகிறது.

பல்வேறு சிறப்புகள் பெற்றதும் காலத்தால் மிகவும் பழமையானதுமான இந்த கோவில், தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் நிர்வாகத்தில் உள்ளது. கோவிலில் தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வந்தன. தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பக்தர்கள் வழிபாடு மட்டும் நடந்து வருகிறது. குடமுழுக்கு விழா நடந்து 19 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கோவிலில் உள்ள சுதை சிற்பங்கள் பெரும்பாலானவை சேதமடைந்து விட்டன. வர்ண பூச்சுகள் அனைத்தும் மங்கி விட்டன. கோவில் கோபுரங்களில் செடிகள் வளர தொடங்கிவிட்டன.

எனவே இனியும் தாமதிக்காமல் புராதனவனேஸ்வரர் கோவிலில் திருப்பணி வேலைகளை தொடங்கி குடமுழுக்கு விழாவை நடத்த தமிழக அரசும், ஊரின் முக்கிய பிரமுகர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்கள் அனைவரின் நீண்ட நாளைய கோரிக்கையாகும்.
Tags:    

Similar News