செய்திகள்
கொரோனா பரிசோதனை

1 லட்சத்து 92 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை- சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

Published On 2020-11-18 11:18 GMT   |   Update On 2020-11-18 11:18 GMT
நீலகிரியில் 1 லட்சத்து 92 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 7 ஆயிரத்து 130 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தினமும் 100 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதியாகி வந்தது. அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு குறைந்தது.

தற்போது தினமும் 50-க்கும் கீழ் கொரோனா உறுதியாகி வருகிறது. இருப்பினும் அரசு வழிமுறைகளின்படி தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 6 ஆயிரத்து 894 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மீதமுள்ள 195 பேர் மட்டுமே மருத்துவமனைகள் மற்றும் கண்காணிப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 125 படுக்கைகள், குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் 60 படுக்கைகள், கூடலூர் அரசு மருத்துவமனையில் 36 படுக்கைகள் உள்ளன.

கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் நீலகிரியில் செயல்பட்டு வந்த 4 கண்காணிப்பு மையங்கள் மூடப்பட்டு உள்ளன. அந்த சென்டர்கள் மீண்டும் தனியார் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது மையங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. அங்கு பெரும்பாலான காலி படுக்கைகள் உள்ளன.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையை யொட்டி நீலகிரிக்கு வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் 12 ஆயிரத்து. மேற்பட்டோர் வந்தனர். இதனால் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் மக்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்க குஞ்சப்பனை, பர்லியார் சோதனைச்சாவடிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வயதானவர்கள் மற்றும் சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி தென்பட்ட நபர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 321 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தொடர்ந்து சோதனைச்சாவடிகள் மற்றும் கொரோனா பரிசோதனை மையங்களில் தாமாக முன் வருகிறவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News