ஆன்மிகம்
அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோவில்

அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோவில்

Published On 2021-09-04 07:13 GMT   |   Update On 2021-09-04 07:13 GMT
இத்திருக்கோவிலின் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது ஒரு இடத்தில் நின்று காணும் போது ஐந்து கோபுரங்களின் தரிசனம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன.
திருத்தலக் குறிப்பு:

இத்திருக்கோவில் அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோவில் மற்றும் இக்கோவிலின் உள்ளே இளங்கோவில் என்னும் அருள்மிகு மின்னும் மேகலை சமேத சகல புவனேஸ்வரர் திருக்கோவில் என இரண்டு கோவில்கள் சேர்ந்து அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த கலை நயம் மிக்க சிற்பங்களைக் கொண்ட சிவ தலமாக விளங்குகிறது. இந்த இரண்டு கோவில்களும் சோழர் காலத்திய கற்கோயிலாக விளங்குகின்றன. இராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி ஆகியோரது காலத்தில் கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோழ நாட்டின் காவிரி தென்கரை பாடல் பெற்ற திருத்தலங்களில் 56, 57-வது திருத்தலங்களாக விளங்குகின்றன.

தல மூர்த்தி : அருள்மிகு மேகநாத சுவாமி
தல இறைவி : அருள்மிகு லலிதாம்பிகை (சாந்த நாயகி அம்மன்)
தல விருட்சம் : வில்வ மரம்
தீர்த்தம் : சூர்ய புஷ்கரணி

திருமீயச்சூர் பெருங்கோவில் கஜப்பிரஷ்ட விமான அமைப்பினை உடையது. இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும் ஏழு கலசங்களுடனும், கோவிலின் இரண்டாவது உள் கோபுரம் மூன்று நிலைகளுடன் ஐந்து கலசங்களுடனும் காணப்படுகின்றன. முதலில் அன்னை லலிதாம்பிகை குடிகொண்டுள்ள சன்னதி தனி கோபுரத்தின் கீழ் உள்ளது. அதனை அடுத்து, பெருங்கோயிலின் இரண்டாவது உள் கோபுரத்தில் நுழையும்போது ரத விநாயகர் நம்மை வரவேற்கிறார்.

முதலில் மேகநாத சுவாமி சன்னதி அமைந்துள்ளது. உட் பிரகாரத்தின் தென் பகுதியில் நாக பிரதிஷ்டைகள், சேக்கிழார், போன்றோரது திருவுருவங்களும், சப்த மாதாக்கள் பூஜித்த லிங்கங்கள், சுற்றி வரும்போது பிரகாரத்தில், அக்னி, எமன், இந்திரன் வழிபட்ட லிங்கங்கள், வள்ளி, தேவசேன சமேத சுப்பிரமணியர், நிருதி, வருணன், குபேரன், அகத்தியர், ஈசான லிங்கங்களும் உள்ளனர்.

இக்கோவில் சிற்பக் கலையில் சிறப்போடு விளங்குகிறது என்பதற்கு உதாரணமாக, சுவாமி அம்பாளை அமைதியாய், சாந்தமாய் இருக்கச் சொல்லும் தோற்றத்தில் இத்தலத்தின் க்ஷேத்திர புராணேஸ்வரர் திருவுருவம் அமைந்துள்ளது. இந்த சிற்பத்தில் என்ன ஒரு விசேஷம் என்றால், அம்பாளையும், ஈஸ்வரனையும் ஒரு புறத்தில் இருந்து பார்க்கும்போது சிரித்த முகமாகவும், மற்றொரு புறத்தில் இருந்து காணும் போது கோபமாகவும் தோன்றும் வண்ணம் இந்த சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த சிற்பத்தை காணும்போது நம் தினப்படி வாழ்வில் நடக்கும் விஷயம் தான் நினைவுக்கு வருகிறது. வீட்டில் கணவன் மனைவிக்குள் எத்தனை பிரச்சினைகள் நடந்து, சண்டை சச்சரவுகள் நடந்தாலும், வெளியில் இருந்து ஒரு விருந்தினர் நம் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்றால் அப்படியே கோபமான முகத்தை, சாந்தமான முகமாக மாற்றிக்கொண்டு விருந்தோம்பல் புரிவது நமது பண்பாடு. இவ்வாறு இறைவன் கூட அவர்களைக் காணச் சென்ற பக்தர்களாகிய நம்மை விருந்தினர்களாக நினைத்து தன் மனைவியை சிரித்த முகத்துடன் இருக்குமாறு சொல்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஈஸ்வரனக்குத்தான் அவரது பக்தர்கள் மேல் எத்தனை பிரியம்.

இப்பெருமானைப் பார்த்துவிட்டு அப்படியே சுற்றி வரும்போது தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சந்திரசேகரர், அஷ்டபுஜா துர்க்கை, ரிஷபாருடர், ஆகியோரது திருவுருவங்களையும் கடந்து செல்கின்றோம். இந்த பெருங்கோயிலின் அர்த்தமண்டப வாயிலில், துவார கணபதிகளையும், போதிகை தூண்களும் அழகு சேர்க்கின்றன. இக்கோயிலின் வடப் பக்கத்திலே இளங்கோயிலை தரிசனம் செய்யலாம்.

இத்திருக்கோவிலின் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது ஒரு இடத்தில் நின்று காணும் போது ஐந்து கோபுரங்களின் தரிசனம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. கோபுர தரிசனம் கோடி புண்ணியம். கோபுரங்களின் தரிசனம் கோடானு கோடி புண்ணியம்.

கோபுர தரிசனத்திற்கு பின்னர் அங்கேயே சற்றுதள்ளி, இளங்கோயிலின் சுற்றுச் சுவர்களில் லிங்கோத்பவர், பிரம்மா, மகாவிஷ்ணுவாகிய மும்மூர்த்திகளின் தரிசனம் நமக்கு ஒருசேரக் கிடைக்கிறது.

திருக்கோவில் அமைவிடம்:

அருள்மிகு லலிதாம்பிகை திருக்கோவில், திருமீயச்சூர் என்னும் ஒரு சிற்றூரில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள பேரளம் என்னும் ஊருக்கு அருகே அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவிலும், திருவாரூரில் இருந்து 22 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. காரைக்காலில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் பாதையில் உள்ளது.

Tags:    

Similar News